’வரும் சனிக்கிழமை அன்று இந்த வாரத்திற்கான மெகா தடுப்பூசி முகாம் நடைபெறும். அசைவம் சாப்பிடுவோர், மது அருந்துவோர் ஞாயிற்றுக்கிழமை முகாம்களில் பங்கேற்காமல் இருக்கிறார்கள். இவற்றை சாப்பிட்டால் தடுப்பூசி செலுத்தக் கூடாது என்ற வதந்திகளை அவர்கள் நம்புகிறார்கள்.’ என்றார் அமைச்சர் மா.சுப்ரமணியம்.
முன்னதாக மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு அரசு பல் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் நடமாடும் பல் மருத்துவ வாகனத்தை மக்கள் பயன்பாட்டிற்காக தொடங்கி வைத்தார் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன். இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு மற்றும் மருத்துவத்துறை அதிகாரிகள் இந்நிகழ்ச்சியில் உடன் பங்கேற்றனர்.
அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்ரமணியன்,
“வாரந்தோறும் செவ்வாய், வியாழக் கிழமைகளில் பல் மருத்துவ வாகனம் சென்னையின் பல்வேறு பகுதிகளிலும் சேவையை மேற்கொள்ளும். அரசு பள்ளிகளுக்கும் இந்த வாகனம் அனுப்பப்பட்டு மாணவர்களுக்கு பல் பரிசோதனை மற்றும் சிகிச்சை மேற்கொள்ளப்படும். அடுத்தடுத்த ஆண்டுகளில் இது போன்ற கூடுதல் வாகனங்கள் வாங்கப்பட்டு இயக்கப்பட அரசு நடவடிக்கை எடுக்கும். 53 லட்சம் டோஸ் கோவிட் தடுப்பு மருந்துகள் தற்போது கையிருப்பில் உள்ளது. முதல் தவணை தடுப்பூசி 67% மற்றும் இரண்டாவது தவணை 25% பேர் போட்டுள்ளனர். 30.42 லட்சம் பேர் இரண்டாவது தவணை உரிய நேரத்தில் செலுத்திக் கொள்ளவில்லை.

இந்த வாரம் சனிக்கிழமை மெகா தடுப்பூசி முகாம் நடைபெறும். அசைவம் சாப்பிடுபவர்கள், மது அருந்துவோர் ஞாயிற்றுக்கிழமை முகாம்களில் பங்கேற்காமல் இருக்கிறார்கள். இவற்றை சாப்பிட்டால் தடுப்பூசி செலுத்தக் கூடாது என்ற வதந்திகளை அவர்கள் நம்புகிறார்கள். இது தவறு. எனினும் அவர்களையும் தடுப்பூசி போடச் செய்யும் விதமாக இவ்வாரம் சனிக்கிழமை முகாம் நடத்துகிறோம். 50,000 முகாம்கள் சனிக்கிழமை நடத்தப்படும். சென்னை மாநகராட்சியில் 1600 முகாம்களின் எண்ணிக்கை 2500 ஆக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. சந்தைகள் கடைத் தெருக்களில் பண்டிகை கால கூட்டத்தில் மக்கள் முக கவசம் தொடர்ந்து அணிய வேண்டும். கடைகள் திறந்திருக்கும் நேரம் குறைக்கப்படாது.” எனச் செய்தியாளர்களிடம் விளக்கினார் அமைச்சர் மா. சுப்ரமணியம்.
























