தமிழ் நாட்டில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு மேற்கொண்ட பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தொடர்ந்து, தொற்று பாதிப்பு படிப்படியாகக் குறைந்து வருகிறது. இதையடுத்து ஊரடங்கு கட்டுப்பாடுகளிலும் பல்வேறு தளர்வுகள் படிப்படியாக அளிக்கப்பட்டுள்ளன.
அதன்படி கடந்த மாதம் 1ந்தேதி முதல் 9-12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. இதன் தொடர்ச்சியாக, வருகிற நவம்பர் 1ந்தேதி முதல் 1-8 ஆம் வகுப்பு வரையிலான வகுப்புகள் திறக்கப்படும் எனத் தமிழக அரசு அறிவித்துள்ளது.
இந்நிலையில் தமிழக பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சென்னை வேளச்சேரியில் நடந்த நூல் வெளியீட்டு விழா ஒன்றில் கலந்து கொண்டார். அந்த விழா முடிந்து செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், நமது பள்ளி மாணவர்களுக்கு ஆங்கிலத்தில் பேசும் திறன் குறைவாக உள்ளது. இதனால், பள்ளி நேரத்திற்கு பின் ஆங்கில பேச்சுத்திறன் பயிற்சி அளிக்கப்படும் என தெரிவித்தார்.
























