வங்கதேசத்தில் துர்காபூஜையன்று நடந்த மத வன்முறை காரணமாக 4 இந்துக்கள் படுகொலை செய்யப்பட்ட நிலையில் தற்போது தொடரும் இந்த வன்முறையின் விளைவாக மேலும் இருவர் படுகொலை செய்யப்பட்டிருப்பதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
கடந்த புதன்கிழமையன்று, துர்கை பூஜை விழாவின் போது, துர்கை சிலையின் முழங்காலுக்கு அருகே குர்ஆன் வைக்கப்பட்டிருப்பது போன்ற வீடியோ வெளியானதை அடுத்து அங்கு போராட்டம் வெடித்தது. இதன் தொடர்ச்சியாக துர்கா பூஜையின் இறுதி நாளான வெள்ளிக்கிழமையன்று பேகம்கஞ்ச் பகுதியில் உள்ள தெருக்களில் நூற்றுக்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் ஊர்வலம் சென்றபோது வன்முறை உண்டானது. துர்கா பூஜை திருவிழாவின் பத்தாம் நாளன்று, இந்துக்கள் கோயிலில் சடங்குகளை செய்து வந்துள்ளனர். அப்போது, 200க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள் கோயில் மீது தாக்குதல் நடத்தினர். கோயில் நிர்வாக உறுப்பினர் ஒருவரை அடித்தே கொன்றுள்ளனர் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சனிக்கிழமை காலை, கோயில் அருகே உள்ள குளத்தில் மற்றொரு இந்து மதத்தை சேர்ந்த ஒருவரின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. நேற்று நடைபெற்ற தாக்குதல் சம்பவத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். குர்ஆன் வீடியோ சமூகவலைதளத்தில் வெளியான பிறகு வங்கதேசத்தில் சிறுபான்மையினராக உள்ளஇந்துக்கள் மீது குறிவைத்து வன்முறை நிகழ்த்தப்பட்டது. புதன்கிழமை பிற்பகுதியில், ஹாஜிகஞ்சில் இந்து கோயிலில் தாக்குதல் நடத்திய 500 பேர் மீது போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் நான்கு பேர் கொல்லப்பட்டனர். நாடு முழுவதும் குறைந்தது 150 இந்துக்கள் காயமடைந்திருப்பதாக இந்து மத தலைவர் கோபிந்தா சந்திர பிரமானிக் செய்தி நிறுவனத்துக்கு பேட்டி கொடுத்துள்ளார்.
மதக்கலவரத்தில் ஈடுபட்ட கொலை செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அந்நாட்டின் பிரதமர் ஷேக் ஹசினா தெரிவித்திருந்தார். இந்துக்கள் சிறுபான்மையாக உள்ள வங்கதேசத்தில் இந்துக்களுக்கு பாதுகாப்பில்லை என்கிற குரல் எழுப்பப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் இரண்டு பேர் கொல்லப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
























