கே.ஜி.எஃப் திரைப்படத்தின் மூலம் கன்னட திரையுலகு மீதான கவனத்தை ஈர்த்த இயக்குநர் பிரசாந்த் நீல் நடிகர் ராம் சரணை சந்தித்த புகைப்படங்கள் வெளியிடப்பட்டிருக்கிறது.
தெலுங்கின் முன்னணி இளம் நடிகர்களில் ஒருவர் ராம் சரண். சிரஞ்சீவியின் மகனான இவர் ராஜமௌலியின் இயக்கத்தில் வெளியான மாவீரன் திரைப்படம் மூலம் தமிழ் மக்களுக்கும் அறிமுகமானார். பாகுபலி 2க்குப் பிறகு ராஜமெளலி இயக்கியுள்ள ‘ஆர்ஆர்ஆர்’ திரைப்படத்தில் நடித்துள்ளார். அடுத்ததாக ஷங்கர் இயக்கதில் தற்போது, ‘ராம் சரண் 15’ படத்தில் நடித்து வருகிறார்.

ஷங்கர் படத்துக்குப் பிறகு அடுத்ததாக, ‘ஜெர்சி’ திரைப்பட இயக்குநர் கெளதம் இயக்கத்தில் நடிக்கவிருப்பதற்கான அறிவிப்பு கடந்த வாரம் வெளியானது. இந்நிலையில் ராம் சரணின் 17வது திரைப்படத்தை இயக்குநர் பிரஷாந்த் நீல் இயக்கவிருக்கிறார். நேற்று, பிரஷாந்த் நீல் ராம் சரண் மற்றும் சிரஞ்சீவியை சந்தித்திருக்கிறார்.இந்தப் புகைப்படத்தை பிரஷாந்த் நீல் மற்றும் ராம் சரண் உற்சாகமுடன் வெளியிட்டு அதனை உறுதிப்படுத்தியுள்ளனர். பிரஷாந்த் நீல் இயக்கத்தில், ‘கேஜிஎஃப் 2’, ‘சலார்’ உள்ளிட்ட திரைப்படங்கள் விரைவில் வெளியாகவிருக்கின்றன. இதனை அடுத்து ’ஜூனியர் என்டிஆர் 31’ படத்தையும் பிரஷாந்த் இயக்கவிருக்கிறார். இதற்குப் பிறகே ராம் சரண் படத்தை இயக்குவார் என தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
























