மழை காரணமாக நிறுத்தப்பட்டிருந்த உதகை ரயில் சேவை நான்கு நாட்களுக்குப் பின் மீண்டும் தொடங்கப்பட்டிருப்பதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மேட்டுப்பாளையத்திலிருந்து உதகை செல்லும் மலை ரயில் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்தியாவின் மிகப்பழமையான ரயில் பாதைகளில் இதுவும் ஒன்று என்பதோடு நீலகிரியின் எழிலை ரசித்தபடியே பயணம் செய்வது பேரனுபவமாக இருக்கும். இதற்கென திட்டமிட்டு பல பயணிகள் உதகை வருவர்.
இந்நிலையில் தொடர் மழையின் காரணமாக மலை ரயில் பாதையில் இரு இடங்களில் ஏற்பட்ட மண்சரிவால் மேட்டுப்பாளையம் முதல் உதகை வரையிலான ரயில் சேவை கடந்த நான்கு நாட்களாக ரத்து செய்யப்பட்டிருந்தது. 30க்கும் மேற்பட்ட ரயில்வே ஊழியர்கள், மண்சரிவுகளை அகற்றி, இருப்பு பாதைகளை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். தற்போது அப்பணிகள் நிறைவடைந்ததையடுத்து இன்று காலை முதல் வழக்கம் போல் மலை ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. மலை ரயில் பயண விரும்பிகளுக்கு இது நற்செய்தியாக உள்ளது.
























