விஜயதசமி விழா வரவுள்ள நிலையில் அன்று கோயில்களை திறப்பது குறித்து தமிழ்நாடு அரசே முடிவெடுக்கலாம் என சென்னை உயர்நீதி மன்றம் கூறியுள்ளது.
கோவையை சேர்ந்த ஆர்.பொன்னுசாமி, ’சென்னை உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், கொரோனா பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தமிழ்நாட்டில் தொற்று படிப்படியாக குறைய தொடங்கியதும், ஊரடங்கு தளர்வுகளும் அறிவிக்கப்பட்டன.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை 3 நாட்கள் வழிபாட்டு தலங்கள் மூடியிருக்க வேண்டும் எனத் தமிழக அரசு அறிவித்துள்ளது. நவராத்திரி பண்டிகை நாடு முழுவதும் வெகு சிறப்பாக கொண்டாடப்படும் பண்டிகையாகும், வருகிற 15-ந்தேதி வெள்ளிக்கிழமை விஜயதசமி பண்டிகை வருகிறது. அன்று தமிழ்நாடு அரசு உத்தரவின்படி கோயில்களை திறக்காது. ஆகவே விஜயதசமி பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் உள்ள கோயில்களை திறக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும்’ எனத் தன் மனுவில் கோரிக்கை விடுத்திருந்தார்.

அவசர வழக்காக சென்னை உயர்நீதி மன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்ட இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, விஜயதசமியன்று கோவில்களை திறப்பது குறித்து முதலமைச்சர் நாளை நிபுணர்களுடன் கலந்தாலோசித்து முடிவெடுப்பார் என உயர்நீதி மன்றத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து விஜயதசமியன்று கோயில்களை திறப்பது குறித்து தமிழ்நாடு அரசே முடிவெடுக்கலாம் எனத் தீர்ப்பு வழங்கி வழக்கை முடித்து வைத்தது, சென்னை உயர்நீதி மன்றம்.
























