நேற்று பெங்களூரு – கொல்கத்தா அணிகளுக்கிடையே நடைபெற்ற எலிமினேட்டர் போட்டியில் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வெற்றி பெற்றதன் மூலம் குவாலிஃபயர் 2க்கு தேர்வாகியிருக்கிறது. பெங்களூரு அணி வெளியேறியது.
பெங்களூரு அணிக்கு இந்தப் போட்டி மிகவும் முக்கியமான போட்டியாக இருந்தது. காரணம், இந்திய அணியின் கேப்டனாகவும், உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேனாகவும் திகழ்ந்தாலும் விராட் கோலி தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி இதுவரை ஒரு முறை கூட ஐபிஎல் கோப்பையை வென்றதில்லை. பெங்களூரு அணி ரசிகர்கள் ஒவ்வொரு முறையும் ஈ சாலா கப் நம்தே என்று சொல்லி சொல்லி டயர்டாகி விட்டார்கள். இந்த சூழலில் இந்த ஐபிஎல் உடன் தான் கேப்டன் பதவியிலிருந்து விலகப்போவதாக விராட் கோலி அறிவித்திருந்தார்.
பெங்களூரு அணியின் கேப்டனாக விராட் கோலிக்கு இதுவே கடைசிப்போட்டி. இத்தனை ஆண்டு கனவை இப்போதாவது மெய்ப்பிப்பாரா என்கிற ஆவலோடு பெங்களூரு ரசிகர்கள் போட்டியை எதிர்நோக்கியிருந்தனர். சென்ற ஆண்டு ஐபிஎல் தொடரில் தொடர்ச்சியாக பெங்களூரு அணி வெற்றி பெற்றதும் குத்தாட்டம் போட்ட பெங்களூரு ரசிகர்கள் ‘கண்ணன்தேவன் டீ பொடி சிஎஸ்கே புடிபுடி’ என சென்னை ரசிகர்களை சீண்டினார்கள். அப்பாடல் வெளியான பிறகு நடந்த போட்டிகளிலெல்லாம் பெங்களூரு அணி தோற்றது. சென்னை ரசிகர்கள் அதே பாடலை வைத்து பெங்களூரு ரசிகர்களை கலாய்த்துத் தள்ளிவிட்டார்கள். அதன் விளைவாக இந்த தொடரில் பெங்களூரு ரசிகர்கள் சற்றே அடக்கி வாசித்தார்கள்.

2008ம் ஆண்டிலிருந்து கனவாக இருக்கும் ஐபிஎல் கோப்பை இம்முறையும் அவர்களுக்கு கனவாகவே போய்விட்டது. என்னதான் வெறுப்பேற்றி கடுப்பேற்றினாலும் பெங்களூரு ரசிகர்களை நினைத்து சென்னை ரசிகர்கள் கூட வருந்தத் தொடங்கி விட்டனர். கொல்கத்தா தற்போது முரட்டுத்தனமான ஃபார்மில் இருக்கிறது. யாரா இருந்தாலும் அடிப்பேண்டா என்று வந்து கொண்டிருக்கும் அணிக்கு 139 இலக்கு வைத்தது பெங்களூரு. அய்யோ இந்த ஸ்கோரெல்லாம் சுப்மன் கில்லுக்கும் வெங்கடேஷ் அய்யருக்குமே பத்தாதேடா என்று கொல்கத்தா ரசிகர்கள் காலரை தூக்கிவிட்டுக் கொள்ள போட்டி அவ்வளவு எளிதானதாக இல்லை. 19வது ஓவரின் நான்காவது பந்தில்தான் கொல்கத்தா தனது வெற்றியை உறுதி செய்தது. என்ன முடிவு வந்தாலும் அதற்கு தயாராக இருங்கள் என கோலி முன்னரே சொல்லியிருந்தார். விளையாட்டு என்பது வெற்றி தோல்விகளுக்கு அப்பாற்பட்டது என்று பெங்களூரு ரசிகர்களுக்கு ஆறுதல் கூறுவதைத் தவிர வேறு வழியில்லை.
























