மத்திய அரசு ரூ. 18 ஆயிரம் கோடிக்கு ஏர் இந்தியாவை டாடா நிறுவனத்துக்கு விற்றுள்ளது. ’டாடா குழுமத்துகு மோடி அரசு அளிக்கும் பரிசுதான் இது. ஏர் இந்தியாவின் 46,000 கோடி கடன் மக்கள் தலையில்தான் விடியும்’ என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் சீதாராம் யெச்சூரி காட்டமாக விமர்சித்துள்ளார்.
அண்மையில் 18 ஆயிரம் கோடி ரூபாய்க்கு ஏர்இந்தியாவை ஏலத்தில் எடுத்தது, டாடா குழுமத்தைச் சேர்ந்த டேலஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனம்.

செய்தியாளர்களுக்கு இது தொடர்பாகப் பேட்டியளித்த யெச்சூரி கூறும்போது, “நாட்டின் பொதுச் சொத்துகளை மத்திய அரசு இடைவிடாமல் கொள்ளையடித்து வருகிறது. டாடா நிறுவனத்துக்கு ஏர் இந்தியா ரூ.18 ஆயிரம் கோடிக்கு விற்கப்பட்டுள்ளது. இது, டாடாவுக்கு மோடி அரசு அளிக்கும் இலவச பரிசு போன்றதுதான். பட்டப்பகலில் நெடுஞ்சாலைகளில் நடக்கும் கொள்ளையை போல் இது நடந்துள்ளது. டாடா நிறுவனம் ரூ.15 ஆயிரத்து 300 கோடி கடனை ஏற்றுக்கொண்டாலும், அது மறுசீரமைக்கப்பட்டு விடும். மீதி ரூ.2 ஆயிரத்து 700 கோடியை மட்டுமே மத்திய அரசுக்கு கொடுக்கும்.
ஏர் இந்தியாவின் மீதி கடன் ரூ.46 ஆயிரத்து 262 கோடியை மத்திய அரசுதான் ஏற்க வேண்டி இருக்கும். அதாவது, பொதுமக்கள் தலையில்தான் அந்த கடன் வரிகளாகச் சுமத்தப்படும். அதே சமயத்தில், ஏர் இந்தியா வாங்கிய சொத்துகள், விமானங்கள் உட்பட டாடா நிறுவனத்துக்கு சொந்தமாகி விடும். இது எப்படி இருக்கு?” என்று கேள்வி எழுப்பினார் சீதாராம் யெச்சூரி.
முன்னதாக இது தொடர்பாகப் பேசிய காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி, “மோடிஜி தனக்காக 2 விமானங்களை ரூ.16,000 கோடிக்கு வாங்கியுள்ளார். ஆனால் இந்திய அரசின் சொத்தாகிய ஏர் இந்தியாவை ரூ.18,000 கோடிக்கு மோடிஜி தன் பில்லியனர் நண்பர்களுக்கு பரிசாக அளித்துள்ளார்” எனக் கிண்டலாகக் குறிப்பிட்டார்.
டாடா நிறுவனத்தால் தொடங்கப்பட்டதுதான் ஏர் இந்தியா நிறுவனம். கடந்த 1953-ம் ஆண்டு இந்த நிறுவனத்தை மத்திய அரசு நாட்டுடைமை ஆக்கியது. ஏர் இந்தியா தற்போது கடும் நட்டத்தில் சிக்கி தவித்து வருகிறது. இதனையடுத்து ஏர் இந்தியாவை மத்திய அரசு விற்பனை செய்திருப்பது கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறது.
























