கடந்த சில நாட்களாக இந்தியாவில் நிலக்கரி எடுக்கப்படும் சுரங்கங்கள் அமைந்துள்ள பகுதிகளில் பெய்துவரும் கனமழை காரணமாக நிலக்கரி உற்பத்தி மற்றும் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் தலைநகரான டெல்லிக்கு ஒருநாள் மின்சாரம் உற்பத்தி செய்வதற்கான நிலக்கரியே தங்கள் கையிருப்பில் உள்ளதாக மாநில நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதேபோல், பல்வேறு மாநிலங்களிலும் நிலக்கரி கையிருப்பு மிகவும் குறைவாகவே உள்ளது. இதனால், மின் உற்பத்தி மற்றும் மின் விநியோகம் பாதிக்கும் சூழல் இந்தியாவில் ஏற்பட்டிருக்கிறது.
தனது மின்சார தேவைக்கு நிலக்கரியையே பெரிதும் சார்ந்துள்ளது, இந்தியா. இந்தியாவின் 70 சதவீத மின் தேவை அனல் மின் நிலையங்கள் மூலம்தான் பூர்த்தி செய்யப்பட்டு வருகிறது. பெய்துவரும் கனமழை காரணமாக நிலக்கரி எடுக்கப்படும் சுரங்கங்கள் அமைந்துள்ள பகுதிகளில் நிலக்கரிச் சேகரிப்பு மற்றும் விநியோகம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

நிலக்கரியின் விலை சர்வதேச அளவில் கடுமையாக உயர்ந்துள்ளதால் அவற்றின் இறக்குமதியும் தற்போது கேள்விக்குள்ளாகி இருக்கிறது. இதனால் ஏற்பட்டுள்ள கடும் தட்டுப்பாடு காரணமாக பெரும்பாலான மாநிலங்களின் நிலக்கரி கையிருப்பும் வெகுவாகக் குறைந்துள்ளது.
இந்நிலையில் டெல்லியில் உள்ள அனல் மின் நிலையங்களில் ஒருநாளைக்கு தேவையான மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் அளவே நிலக்கரி கையிருப்பில் உள்ளதாக அம்மாநில மின்துறை அமைச்சா் சத்யேந்தா் ஜெயின் தெரிவித்துள்ளார். ஏற்கனவே வட மாநிலங்கள் பலவற்றில் நாள்தோறும் சில மணி நேரங்கள் மின் தடை அமலில் இருப்பது குறிப்பிடத் தக்கது.
























