உத்திரப்பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரியில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது கார் ஏற்றிக் கொலை செய்த விவகாரத்தில் ஆசிஷ் மிஸ்ரா இன்று காலை ஆஜராகியுள்ளார்.
லக்கிம்பூர் கேரியில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது கார் ஏற்றிக் கொலை செய்ததன் விளைவாக நடந்த கலவரத்தில் மொத்தம் 8 பேர் உயிரிழந்தனர். இப்பிரச்னையில் மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ரா உள்ளிட்ட சிலர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது. நாடெங்கும் பற்றியெரிந்த இவ்விவகாரத்தில் ஆதாரமின்றி எந்த நடவடிக்கையும் மேற்கொள்ள முடியாது என உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்திருந்தார். இந்நிலையில், லக்கிம்பூா் கேரியில் நடைபெற்ற வன்முறை சம்பவம் தொடா்பான விசாரணைக்கு காவல்துறையினர் அனுப்பிய முதல் சம்மனுக்கு மத்திய உள்துறை இணையமைச்சா் அஜய் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ரா ஆஜராகவில்லை. இதையடுத்து அவா் சனிக்கிழமை காலை 11 மணிக்குள் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று அஜய் மிஸ்ராவின் வீட்டில் போலீஸாா் நோட்டீஸ் ஒட்டியிருந்தனர். இதுகுறித்து லக்னோவில் மத்திய இணையமைச்சா் அஜய் மிஸ்ரா செய்தியாளா்களிடம் ‘‘எனது மகன் உடல்நலத்துடன் இல்லை. எனவே, அவா் விசாரணைக்கு ஆஜராவதை தவிா்த்தாா். அவா் சனிக்கிழமை ஆஜராகி தனது வாக்குமூலத்தையும் தன்னிடம் உள்ள ஆதாரத்தையும் வழங்குவாா்’’ என்று தெரிவித்தாா். இந்நிலையில், இன்று காலை குற்றப்பிரிவு அலுவலகத்தில் ஆஜராகியுள்ளார்.
இதனால் அப்பகுதியில் பதற்றம் நிலவுகிறது. விசாரணையின் இறுதியில் அவர் கைது செய்யப்படலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. முக்கியக் குற்றவாளியாக ஆசிஷ் மிஸ்ரா கருதப்படும் நிலையில் அவரைக் கைது செய்யக்கோரி எதிர்க்கட்சிகள் அழுத்தம் கொடுத்து வருகின்றன.
























