ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகள் நேற்றோடு முடிவு பெற்ற நிலையில் டெல்லி, சென்னை, பெங்களூரு மற்றும் கொல்கத்தா அணிகள் அரையிறுதிக்குத் தேர்வாகியுள்ளன.
நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் அணியாக அரையிறுதிக்குள் நுழைந்தது. அதனையடுத்து டெல்லி, பெங்களூரு அணிகள் அரையிறுதிக்கு தேர்வான நிலையில் நான்காவது இடத்தைப் பிடிக்கும் அணி எது என்பதில் கொல்கத்தாவுக்கும், மும்பை அணிக்கும் கடும் போட்டி நிலவியது. இந்நிலையில் நேற்று முந்தினம் ராஜஸ்தானுடனான போட்டியில் 86 ரன் வித்தியாசத்தில் பெரிய வெற்றி பெற்றது கொல்கத்தா அணி. இதன் மூலம் 8 அணிகளிலேயே ரன் ரேட் அதிகம் கொண்ட அணியாக மாறியது.
இந்நிலையில், நேற்று ஒரே நேரத்தில் டெல்லி – பெங்களூரு அணிகளுக்கும் மும்பை- ஹைதராபாத் அணிகளுக்கும் ஒரே நேரத்தில் போட்டி நடந்தன. மும்பை அணி ப்ளே ஆஃப் சுற்றுக்குள் நுழைய வேண்டுமெனில் 171 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணியைத் தோற்கடித்தால் மட்டுமே முடியும் என்கிற நிலை இருந்தது. இந்நிலையில் முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்த மும்பை அடித்து நொறுக்கியது. “இத்தனை நாளா என்னய்யா பண்ணிக்கிட்டிருந்தீங்க” எனக் கேட்குமளவு அதன் பெர்ஃபாமன்ஸ் வெறித்தனமாக இருந்தது. எப்படியாவது ப்ளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்து விட வேண்டும் என்கிற உத்வேகத்தோடு மும்பை அணி விளையாடியது. அதில் இஷான் கிஷன் 16 பந்துகள் அரை சதம் அடித்து விளாசினார். 32 பந்துகளில் 84 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். சூர்யகுமார் யாதவ் 40 பந்துகளில் 82 ரன்கள் என சூறையாட்டம் ஆட 235 ரன்களைக் குவித்தது மும்பை அணி.
இந்த ஐபிஎல் சீசனிலேயே மிகவும் அதிகபட்ச ஸ்கோர் இதுதான் என்கிற நிலையில் இதனை சேஸ் செய்யக் களமிறங்கியது ஹைதராபாத் அணி. கேன் வில்லியம்சன் உள்ளிட்ட பேட்ஸ்மேன்கள் அணியில் இல்லை. 65 ரன்களில் அணியைச் சுருட்டினால் ப்ளே ஆஃப்க்குள் நுழைந்து விடலாம் என மும்பை ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்க எங்கள் பங்குக்கு நாங்களும் அடிக்கிறோம் என ஹைதராபாத் அணியும் சூறையாட்டம் ஆடி மும்பையின் அரையிறுதிக் கனவை அடித்து நொறுக்கியது. மனிஷ் பாண்டே அதிகபட்சமாக 69 ரன்கள் அடிக்க மொத்தம் 193 ரன்கள் எடுத்து தோல்வியுற்றது.
டெல்லி – பெங்களூரு போட்டியில் கடைசி பந்தில் சேஸ் செய்து வெற்றி பெற்றது பெங்களூரு அணி. இதன் மூலம் சென்னை அணிக்கு நிகராக 18 புள்ளிகள் பெற்றாலும் ரன் ரேட் அடிப்படையில் அதே 3வது இடத்தில்தான் நீடிக்க முடிந்தது.
குவாலிஃபயரில் சென்னை அணி தேர்வானதில் சென்னை ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் இருக்கிறார்கள். நாளை சென்னை – டெல்லி அணிகளுக்கு இடையே போட்டி நடைபெறவிருக்கிறது.
























