தமிழகத்தில் கொரோனா பரவுவதை தடுக்க 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடுவதை தமிழக அரசு தீவிரப்படுத்தி வருகிறது. தமிழகம் முழுவதும் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு, ஒரே நாளில் ஏராளமானோருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
கடந்த மாதம் 12-ந் தேதி தமிழகத்தில் முதல் மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. அந்த முகாமில் 28.91 லட்சம் பேர் தடுப்பூசி போட்டுக்கொண்டனர். அதையடுத்து கடந்த 19-ந் தேதி நடைபெற்ற 2-வது தடுப்பூசி முகாமில் 16.43 லட்சம் பேரும், 26-ந் தேதி நடந்த 3-வது முகாமில் 25.04 லட்சம் பேரும் தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்.
தமிழகத்தில் 4-வது மெகா தடுப்பூசி முகாம் கடந்த 3-ம் தேதி நடைபெற்றது. இந்த முகாம்கள் மூலம் 25 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. தமிழகத்தில் 17 லட்சத்து 19 ஆயிரத்து 544 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.

5-வது மெகா தடுப்பூசி முகாம் தமிழகம் முழுவதும் அக்டோபர் 10-ம் தேதி (அதாவது நாளை) நடத்தப்பட உள்ளது. இதில் 30,000 முகாம்கள் அமைக்கப்பட்டு, 33 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியின் 200 வார்டுகளில் மீண்டும் 1,600 மெகா சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடைபெற உள்ளது.
இதைப் பயன்படுத்தி அனைவரும் கொரோனாவை ஒழிக்க தடுப்பூசி செலுத்திக்கொள்ளுமாறு தமிழக அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
























