இயக்குநர் சுராஜ் இயக்கத்தில் வடிவேலு நாயகனாக நடிக்கும் ‘நாய்சேகர் ரிட்டர்ன்ஸ்’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் வெளியானதை அடுத்து வடிவேலு ரசிகர்கள் உற்சாகமாக அதனை பகிர்ந்து வருகிறார்கள்.
மிகப்பெரும் தயாரிப்பு நிறுவனமான லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் சுராஜ் இயக்கத்தில் இத்திரைப்படம் தயாராகி வருகிறது. தலைநகரம் திரைப்படத்தில் வடிவேலு ஏற்று நடித்திருந்த கதாப்பாத்திரத்தின் பெயர் ‘நாய் சேகர்’. தமிழ் மக்களுக்கு நன்கு பரிச்சயப்பட்ட அக்கதாப்பாத்திரத்தின் பெயரை வைத்து காமெடி நடிகர் சதீஷ் நாயகனாக நடிக்கும் திரைப்படம் தயாராகியுள்ளது. இத்திரைப்படத்துக்கும் அதே தலைப்பை வைக்க முன் வந்த போது சர்ச்சை எழுந்து பின்னர் சமாதானமானது.

இந்நிலையில் சுராஜ் இயக்கத்தில் தயாராகவுள்ள இத்திரைப்படத்துக்கு வேறு என்ன தலைப்புதான் வைக்க வேண்டும் என்கிற நிலை உருவாகியிருந்தது. இப்படியான சூழலில் அப்படத்திற்கு நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் என்கிற தலைப்பை வைத்துள்ளனர். அதை அறிவிக்கும் விதத்தில் நாய்கள் சூழ வடிவேலு கெத்தாக உட்கார்ந்திருக்கும் ஃபர்ஸ்ட்லுக்கை லைகா நிறுவனம் வெளியிட்டுள்ளது.
வடிவேலுவுக்கென பெரும் ரசிகப்பட்டாளமே இருக்கிறது. மீம் என்கிற வடிவத்தின் தலைமகனாக வடிவேலு இருப்பதினால் அவரை மீம் காட் என்றே மீம் கிரியேட்டர்கள் கொண்டாடுகின்றனர். இந்த அறிவிப்பால் வடிவேலு ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். பழைய ஃபார்மோடு தலைவன் வந்து அடித்து நகர்த்த வேண்டும் என்கிற எதிர்பார்ப்பில் காத்துக்கொண்டிருக்கின்றனர். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு மிக விரைவில் தொடங்க உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளனர்.
























