இந்திய அரசின் ஏர் இந்தியா விமான சேவை நிறுவனத்தை டாடா நிறுவனம் வாங்கியுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.
இந்திய அரசின் ஏர் இந்தியா எனும் உள்நாட்டு விமான சேவை நிறுவனம் 70 ஆயிரம் கோடி இழப்பில் இயங்கிவந்தது. தனியார் விமான நிறுவனங்களுடன் போட்டி போட முடியாத சூழலில் பெருத்த வீழ்ச்சியை சந்தித்திருந்தது. நாளொன்றுக்கு ஏர் இந்தியா நிறுவனம் 20 கோடி ரூபாய் நஷ்டத்தை சந்தித்து வந்தது. பெரும் நஷ்டத்தில் இயங்கிக் கொண்டிருந்த ஏர் இந்தியா நிறுவனத்தை தனியாருக்கு விற்கும் முயற்சியில் மத்திய அரசு இறங்கியது. இந்நிலையில் அதற்கான ஏலம் நடத்தப்பட்டது. இந்த ஏலத்தில் வென்ற டாடா சன்ஸ் நிறுவனம் 18 ஆயிரம் கோடி ரூபாய்க்கு ஏர் இந்தியா நிறுவனத்தை வாங்கியுள்ளது.
இந்தியாவில் முதல் விமான சேவை நிறுவனம் ஜே.ஆர்.டி டாடாவால் டாடா ஏர் சர்வீஸ் என்கிற பெயரில் 1932ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதனையடுத்து 1953ம் ஆண்டு அந்நிறுவனம் அரசுமயமாக்கப்பட்டது. டாடா அதன் தலைவராக இருந்தார். இந்நிலையில் 68 ஆண்டுகளுக்கு பிறகு ஏர் இந்தியா நிறுவனத்தை மீண்டும் டாடா நிறுவனம் வாங்கியுள்ளது.
























