சர்வதேச சதுரங்கப் போட்டிகளில் கலந்து கொண்டு பதக்கம் வென்ற வீரர்களை ஊக்குவிக்கும் விதத்தில் பிரபல சதுரங்க விளையாட்டு வீரர் விஸ்வநாதன் ஆனந்த் உள்ளிட்டவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஊக்கத்தொகை வழங்கினார்.
2021 ஃபிடே இணைய சதுரங்க ஒலிம்பியாட் போட்டியில் இந்திய அணி அரையிறுதியில் அமெரிக்காவிடம் தோல்வியுற்று வெளியேறியது. இந்திய அணியில் விஸ்வநாதன் ஆனந்த், விதித் சந்தோஷ் குஜராத்தி, ஹரிகிருஷ்ணா, நிஹல் சரின், பிரக்ஞானந்தா, கோனெரு ஹம்பி, ஹரிகா, தானியா சச்தேவ், பக்தி குல்கா்னி, வைஷாலி, சவிதா ஸ்ரீ ஆகியோா் இடம்பெற்றிருந்தனா்.

2020ம் ஆண்டு ஃபிடே இணைய சதுரங்க ஒலிம்பியாட் பட்டத்தை இந்தியாவும் ரஷ்யாவும் பகிர்ந்துகொண்டன. இந்நிலையில் சதுரங்க ஒலிம்பியாட் போட்டிகளில் பதக்கம் வென்ற தமிழக வீரர்களை ஊக்குவிக்கும் விதமாக ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளது. தலைமைச் செயலகத்தில் இன்று முதல்வர் ஸ்டாலினை பிரபல சதுரங்க வீரர் விஸ்வநாதன் ஆனந்த் உள்பட தமிழக சதுரங்க விளையாட்டு வீரர்கள் சந்தித்தனர். கடந்த ஆண்டு ஒலிம்பியாட் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றமைக்காக 20 லட்சம் ரூபாய்க்கான காசோலை மற்றும் இந்த ஆண்டு வெண்கலம் வென்றதற்காக 10 லட்சம் ரூபாய்க்கான காசோலையை முதல்வர் சதுரங்க விளையாட்டு வீரர்களுக்கு வழங்கினார்.
செஸ் கிராண்ட் மாஸ்டர், செஸ் சர்வதேச மாஸ்டர் தகுதிகளை அடைந்த தமிழக வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கும் ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் வீ. மெய்யநாதன் உடனிருந்தார். ”வீரர்களை ஊக்குவித்தால் அவர்கள் மேலும் பல சாதனைகள் புரிவார்கள்” என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
























