நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் பீஸ்ட் திரைப்படத்தைத் தொடர்ந்து அவர் தெலுங்குத் திரைப்பட இயக்குநர் வம்சி பைடிப்பள்ளி திரைப்படத்தில் நடிக்கவிருக்கிறார். இத்திரைப்படத்தை பிரபல தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கிறார்.

இத்திரைப்படத்துக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவந்த நிலையில் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் பற்றிய அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. இந்நிலையில் இத்திரைப்படத்தில் நடிகர் பிரகாஷ்ராஜ் நடிக்கவிருப்பது உறுதியாகியிருக்கிறது. தெலுங்கு ஊடகம் ஒன்றுக்கு அளித்தப் பேட்டியில் நடிகர் பிரகாஷ்ராஜ் இதனை உறுதி செய்திருக்கிறார். வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் பிரகாஷ்ராஜ் தோழா மற்றும் மகரிஷி உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். தமிழைப் போலவே தெலுங்கிலும் அவர் நன்கு அறியப்பட்ட நடிகராக இருக்கிறார் என்பதோடு விஜய் – பிரகாஷ் இணைந்த பெரும்பாலான படங்கள் வெற்றிப்படங்களாகியிருக்கின்றன. குறிப்பாக கில்லி திரைப்படத்தின் வெற்றிக்கு விஜய் – பிரகாஷ்ராஜ் கூட்டணி மிகப்பெரும் வலு சேர்த்தது. 2009ம் ஆண்டு வெளியான வில்லு திரைப்படத்துக்குப் பிறகு பிரகாஷ்ராஜ் மீண்டும் விஜய்யுடன் இணைந்து நடிக்கவிருக்கிறார்.
























