11 லட்சத்திற்கும் அதிகமான ஊழியர்கள் இந்திய ரயில்வே துறையில் பணியாற்றி வருகின்றனர். ரயில்வே ஊழியர்களில் அதிகாரிகள் அல்லாத ஊழியர்களுக்கு வருடம் தோறும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு போனஸ் வழங்கப்பட்டு வருகிறது. ரயில்வே துறையில் வேலைபார்க்கும் ஊழியர்களுக்கு நடப்பு நிதியாண்டில் 78 நாட்கள் சம்பளம் வழங்கலாம் என பரிந்துரை செய்யப்பட்டு இருந்தது.
ரயில்வே துறையின் பரிந்துரையின் படி ஊழியர்களுக்கு 78 நாள் ஊதியம் தீபாவளி போனஸாக வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இன்று பிற்பகல் கூடிய மத்திய அமைச்சரவை கூட்டத்தில், ரயில்வே ஊழியர்களுக்கு போனஸ் வழங்குவது தொடர்பான பரிந்துரைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
மத்திய அமைச்சர் அனுராக் தாகூர், மத்திய அமைச்சரவை எடுத்துள்ள முடிவுகள் குறித்து டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது, 2020-2021-ம் ஆண்டில் ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் ஊதியம் போனஸாக வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது. போனஸ் வழங்கப்படுவதன் மூலம் 11.56 லட்சம் ரயில்வே ஊழியர்கள் பயன்பெறுவார்கள் என்று தெரிவித்தார்.
























