இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு நினைவுப் பரிசாக வழங்கப்பட்ட பொருட்களை இணையம் வழியாக ஏலம் எடுத்துக் கொள்ளலாம் என்கிற அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டிருக்கிறது.
கடந்த 7 ஆண்டுகளில் பிரதமர் மோடியை சந்திக்க வருகிறவர்கள் அளிக்கும் நினைவுப் பரிசுகளும், அவர் தலைமை தாங்கும் நிகழ்வுகளில் வழங்கப்படும் நினைவுப் பரிசுகளும் ஏலத்தில் விடப்படுகின்றன. இணையம் மூலம் இந்த ஏலத்தை மத்திய அரசு நடத்துகிறது. அக்டோபர் 7-ம் தேதி வரை நடைபெறும் இந்த ஏலத்தில் விருப்பமுள்ளவர்கள் கலந்து கொண்டு நினைவுப் பரிசுகளை சொந்தமாக்கிக் கொள்ளலாம். இந்த ஏலம் மூலம் கிடைக்கும் தொகை நமாமி கங்கா என்கிற கங்கையை தூய்மைப்படுத்தும் திட்டத்துக்கு பயன்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் 27-ம் தேதி தொடங்கிய இந்த மின் ஏலம் வரும் 7-ம் தேதி வரை நடைபெறுகிறது.
pmmementos.gov.in என்ற இணையதள முகவரி மூலம் ஏலத்தில் பங்குபெற விரும்புவோர் தங்கள் விவரத்தை பதிவு செய்து, பிரதமருக்கு பரிசளிக்கப்பட்ட பொருட்களை ஏலம் எடுத்து தங்களுக்கு சொந்தமாக்கிக் கொள்ளலாம். வரலாற்றுச் சிறப்பு மிக்க பொருட்களை இந்த மின் ஏலம் மூலம் இந்தியாவின் எந்த மூலையில் வசிப்பவர் வேண்டுமானாலும் தங்களுக்கு உடைமையாக்கிக் கொள்ள முடியும். உள்நாடு மட்டுமின்றி வெளிநாடுகளில் பிரதமர் மோடிக்கு அளிக்கப்பட்ட பரிசுப்பொருட்களும் இந்த ஏலத்தில் அடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
























