நீலகிரி மாவட்டம் கூடலூர் சுற்று வட்டாரத்தில் உலவி வந்த ஆட்கொல்லி புலியை சுட்டுக்கொல்ல உத்தரவிடப்பட்டிருப்பதை அடுத்து அதனைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தற்போது அப்புலி சிங்காரா வனப்பகுதிக்கு இடம்பெயர்ந்திருப்பது தெரிய வந்திருக்கிறது.
நீலகிரி மாவட்டம் கூடலூர் சுற்றுவட்டாரப் பகுதியில் டி23 என்று பெயரிடப்பட்ட புலி உலவி வந்தது. இதுவரை 4 மனிதர்களையும் 30க்கும் மேற்பட்ட கால்நடைகளையும் அப்புலி அடித்துக் கொன்றுள்ளது. இப்புலியின் அச்சம் காரணமாக மக்கள் வெளியே நடமாட பயந்த சூழலில் புலியைப் பிடிக்க வனத்துறை நடவடிக்கைகளை மேற்கொண்டது.புலியை மயக்க ஊசி செலுத்தி பிடித்து, வண்டலூர் உயிரியல் பூங்காவில் பராமரிக்க கடந்த 24ம் தேதி உத்தரவிடப்பட்டது. இதனையடுத்து கூண்டில் புலி சிக்காததுடன் மயக்க ஊசி செலுத்த இயலாததால், ஆட்கொல்லி புலியை சுட்டுக் கொல்ல தமிழக முதன்மை வன அதிகாரி சேகர்குமார் நீரஜ் உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில் 11வது நாளாக T23 புலியை தேடும்பணி நடைபெற்று வருகிறது. தேடுதல் வேட்டைக்கு சிப்பிப்பாறை நாய் பயன்படுத்தபட்டு வந்த நிலையில் தற்போது கும்கியையும் பயன்படுத்தித் தேடி வருகின்றனர். மசினகுடியிலிருந்து சிங்காராவுக்கு புலி சென்றுவிட்டதாகத் தெரிய வந்துள்ளது. அப்புலி காட்டெருமை ஒன்றையும் வேட்டையாடியிருக்கிறது. தற்போது அது ஆட்கொல்லி புலி என்று உறுதியாகாத நிலையில் அதனை சுட்டுக்கொல்ல இட்டிருந்த உத்தரவு திரும்பப் பெறப்பட்டிருக்கிறது. புலியை மயக்க ஊசி செலுத்திப் பிடிக்க வனத்துறையினர் முயன்று வருகின்றனர்.
























