சென்னை தேனாம்பேட்டையில் உள்ள முதல்வர் ஸ்டாலின் வீட்டு முன்பு தீக்குளித்த பறையர் பேரவைத் தலைவர் மரணமடைந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
தமிழ்நாடு பறையர் பேரவை என்கிற அமைப்பின் தலைவராக இருப்பவர் அ.வெற்றிமாறன். இவர் கடந்த மாதம் 27ம் தேதி முதலமைச்சர் வீட்டின் அருகே தீக்குளித்தார். அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள ஜமீன் தேவர்குளம் காலனித் தெருவை சேர்ந்தவர் அ.வெற்றிமாறன். 48 வயதான இவர் தமிழ்நாடு பறையர் பேரவை என்ற அமைப்பின் தலைவராக இருந்து வருகிறார். இந்நிலையில் ஜமீன் தேவர்குளம் ஊராட்சி மன்ற தலைவர் போட்டிக்கு வெற்றிமாறன் மனுத் தாக்கல் செய்திருந்தார். அவரது மனுவை பரிசீலனை செய்த தேர்தல் அதிகாரிகள், வெற்றிமாறனின் விண்ணப்பத்தை நிராகரித்துள்ளனர்.
இதன் காரணமாக கடும் அதிருப்திக்கு ஆளான அவர் கடந்த 27-ஆம் தேதி காலை சென்னைக்கு வந்துள்ளார். தேனாம்பேட்டையில் உள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வீடு அமைந்துள்ள சித்தரஞ்சன் சாலைக்கு வந்த அவர் முதல்வர் வீட்டின் அருகே வந்தவுடன் திடீரென தான் மறைந்து வைத்திருந்த ‘டர்பன்டைன்’ என்ற வகை எண்ணெய் – ஐ தனது உடலில் ஊற்றித் தீ வைத்துக் கொண்டார். உடனடியாக அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த காவலர்கள் வெற்றிமாறனை காப்பாற்றி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மருத்துவமனையில் 55 சதவிகித காயங்களுடன் அவர் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அங்கு தீவிரமாக சிகிச்சை கொடுக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து தேனாம்பேட்டை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
























