தன் பெயரிலும் தனது குடும்பத்தினரின் பெயரிலும் வெளிநாடுகளில் செய்யப்பட்டிருக்கும் முதலீடுகள் அனைத்தும் வெளிப்படையானவை என்றும் சட்டப்பூர்வமானது என்றும் கிரிகெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் விளக்கம் அளித்துள்ளார்.
அரசியல் தலைவர்கள், திரைத்துறை மற்றும் விளையாட்டுத்துறை சார்ந்த பிரபலங்கள் மற்றும் தொழிலதிபர்கள் வெளிநாடுகளில் முறைகேடாக பல கோடிகளில் முதலீடு செய்துள்ளதாகப் பட்டியல் ஒன்றை சர்வதேச புலனாய்வு பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு வெளியிட்டிருக்கிறது. `பண்டோரா பேப்பர்ஸ்’ என்ற பெயரில் வெளியாகி இருக்கும் அந்தப் பட்டியலில், கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், தொழிலதிபர்கள் அனில் அம்பானி மற்றும் நீரவ் மோடி உட்பட மொத்தம் 380 இந்தியர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.
சச்சின், அவரது மனைவி அஞ்சலி டெண்டுல்கர் மற்றும் மாமனார் ஆனந்த் மேத்தா ஆகியோர், விர்ஜின் தீவுகளில் இயங்கி வரும் சாஸ் இன்டர்நேஷனல் லிமிடெட் நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளதாக அந்த ஆய்வுக்கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இந்நிலையில் இக்குற்றச்சாட்டுக்கு சச்சின் டெண்டுல்கர் தரப்பிலிருந்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சச்சின் டெண்டுல்கர் அறக்கட்டளையின் இயக்குநர் மிரின்மோய் முகர்ஜி பத்திரிகையாளர்களிடம் கூறும்போது ”சச்சின் மேற்கொண்டிருக்கும் முதலீடுகள் யாவும் சட்டப்பூர்வமானது ஆகும். அவரது வருமானத்திலிருந்தே அவர் முதலீடு செய்திருக்கிறார். இதற்கான வரி முறையாக கணக்கிடப்பட்டு செலுத்தப்பட்டிருக்கிறது. இந்த விவரங்கள் அரசுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டில் முதலீடு செய்யப்பட்ட விவரங்கள் அனைத்தும் வெளிப்படையானவை. வரி செலுத்திய ஆவணங்கள் தெளிவாக இருக்கிறது” என்று அவர் தெரிவித்திருக்கிறார்.
























