ப்ளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற்று முதல் இரண்டு இடங்களில் உள்ள சென்னை – டெல்லி அணிகள் இன்று மோதவிருக்கின்றன.
ஐபிஎல் புள்ளிப்பட்டியலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டெல்லி கேபிடல்ஸ் அணியும் தலா 18 புள்ளிகளோடு முதல் இரண்டு இடங்களில் உள்ளன. ரன்ரேட் அடிப்படையில் சென்னை அணி டேபிள் டாப்பராக இருக்கிறது. இரண்டு அணிகளும் ப்ளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற்று விட்ட நிலையில் குவாலிஃபயர் ஆக தேர்வாக வேண்டிய தேவை உள்ளது. ஆக இன்றைய போட்டியில் சென்னை வெல்லுமானால் முதல் இடத்தைத் தக்க வைத்துக் கொள்ளும். டெல்லி வென்றால் டேபிள் டாப்பராகும். ஆக மொத்தத்தில் இன்று நடக்கவிருக்கும் போட்டி யார் டேபிள் டாப்பர் என்பதை மட்டுமே தீர்மானிக்குமே தவிர வேறு எந்த மாற்றத்தையும் நிகழ்த்தப்போவதில்லை. இரு அணிகளுமே நல்ல ஃபார்மில் இருப்பதால் யார் வெல்வார்கள் என்பதை யூகிக்க முடியாத சூழல் உள்ளது. மேலும் டெல்லியுடனான முதல் போட்டியில் சென்னை தோல்வியுற்றது. அதனை ஈடுசெய்ய சென்னை டெல்லியை தோற்கடிக்க வேண்டும் என்பதே சென்னை ரசிகர்களின் விருப்பமாக உள்ளது.
ப்ளே ஆஃப் சுற்றின் நான்காவது இடத்துக்கான போட்டியில் பஞ்சாப் இருந்த நிலையில், நேற்று பெங்களூர் அணியிடம் தோற்றதன் மூலம் ப்ளே ஆஃப் வாய்ப்பைத் தவற விட்டது. இந்நிலையில் கொல்கத்தா, மும்பை, ராஜஸ்தான் அணிகளுக்கிடையே கடும்போட்டி நிலவி வருகிறது. இந்நிலையில் நாளை ராஜஸ்தான் – மும்பை அணிகளுக்கு இடையே நடக்கும் போட்டி, வியாழன்று கொல்கத்தா – ராஜஸ்தான் அணிகளுக்கிடையான போட்டி மற்றும் வெள்ளிக்கிழமை நடைபெறவிருக்கு ஹைதராபாத் – மும்பை இடையான போட்டிகளைத் தவிர்த்து மற்ற போட்டிகள் எதுவும் ப்ளே ஆஃப் வாய்ப்பைத் தீர்மானிக்காது. கொல்கத்தா, மும்பை, ராஜஸ்தான் ஆகிய மூன்று அணிகளுக்கும் சம வாய்ப்புகள் உள்ள நிலையில் யார் ப்ளே ஆஃப் வரப்போகிறார்கள் என்கிற த்ரில்லோடு ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.
























