இன்று 4ஆம் கட்ட கொரோனா தடுப்பூசி முகாம் தமிழ்நாடு முழுவதும் நடைபெற்றது. மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற தடுப்பூசி முகாமில் கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்தார். அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,
“மத்திய அரசு, தமிழக அரசு தடுப்பூசி செலுத்துவதில் சிறப்பாக செயல்படுவதைப் பார்த்து கூடுதலாக தடுப்பூசிகளை வழங்கியுள்ளது. WHO, IMCR அறிவுரைப்படி 70 சதவிகிதத்திற்கு மேல் தடுப்பூசி செலுத்தி கொண்டால் மூன்றாவது அலையை சமாளித்து விடலாம். விரைவில் தமிழகத்தில் தடுப்பூசி செலுத்துவதில் 70 சதவிகிதம் இலக்கை எட்டி விடுவோம்” என்றும்,
“காய்கறி வண்டிகளில் குட்கா பொருட்கள் அதிகமாக கடத்தப்பட்டு வருவதாக புகார்கள் அளிக்கப்பட்டுள்ளது. காவல்துறை, உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையின் மூலம் அதனை ஒழிக்க தீவிர கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. குட்கா கடத்தலில் ஈடுபட்ட ஏராளமானோர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். குட்கா பொருட்களுக்கு கர்நாடகாவில் தடை இல்லை என்ற காரணத்தால், அங்கிருந்து தமிழகத்திற்கு மிக எளிதாக குட்கா பொருட்கள் அதிகம் கடத்திவரப்படுகிறது” என்றும் கூறினார்.
தமிழ்நாட்டில் ஒட்டு மொத்தமாக இதுவரை 62% விகிதம் பேர் தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர் என்றும், ஜிகா போன்ற புதிய நோய்களை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது என்றும் சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறினார்.
























