நம் உடலில் அழகுக்காகவோ, அவசியத்திற்காகவோ அணியும் பொருட்கள் பெரும்பாலும் பயனைத் தந்தாலும், சில சமயம் நமக்கே ஆபத்து விளைவிப்பவையாக இருந்துவிடும். அப்படி, முக்கியத் தேவைக்காக பொருத்தப்பட்டிருந்த ஒரு பொருள், உயிருக்கே உலைவைப்பதாக மாறியுள்ள ஒரு சம்பவம் அமெரிக்காவில் நடந்தேறியுள்ளது.
அமெரிக்காவின் விஸ்கான்சின் பகுதியைச் சேர்ந்த 22 வயது நபர் ஒருவர், வெள்ளியாலான பல்செட்டை அணிந்திருந்தபோது, கடுமையான இருமல் மற்றும் மூச்சுத்திணறலுக்கு ஆளாகியுள்ளார். இந்நிலையில் அவர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டுள்ளார்.
மருத்துவர்கள் அவரைப் பரிசோதித்த நிலையில், அவர் வாயில் அணிந்திருந்த 1.5 இன்ச் நீளமுள்ள அவரது பல்செட்டை அவர் விழுங்கியுள்ளார் என்று பின் தெரியவந்துள்ளது. அவரது நுரையீரலின் காற்றுப்பாதையில் அந்த பல்செட் நன்றாக சிக்கியிருந்துள்ளது.
பின்னர் மருத்துவர்கள் Bronchoscopy சிகிச்சை மூலம் வளையும் தன்மையுள்ள குழாயை அவரது வாய்வழியாக செலுத்தி நுரையீரலின் காற்றுப்பாதையில் சிக்கியிருந்த பல்செட்டை நீக்கியுள்ளனர். மூச்சுவிட கடும் சிரமப்பட்ட அந்நபர் சிக்கியிருந்த பல்செட் நீக்கப்பட்ட நிலையில், தற்சமயம் சீராக மூச்சுவிடுவதாக தெரிவிக்கப்பட்டது.


























