உலகின் அதிக விலை கொண்ட ஐஸ்கிரீமை ஜப்பானிய நிறுவனம் ஒன்று தயாரித்துள்ளது. கேட்டாலே தலைசுற்றும் அளவுக்கு இருக்கும் விலை காரணமாக, இந்த ஐஸ்கிரீம் உலகின் விலையுயர்ந்த ஐஸ்கிரீம் என்ற சாதனையையும் படைத்துள்ளது.
செல்லட்டோ என்ற ஜப்பானிய ஐஸ்கிரீம் தயாரிப்பு நிறுவனம் ஒன்று இதனைத் தயாரித்துள்ளது. இதன் விலை ரூ.5.2 லட்சம். அப்படி என்ன சிறப்பு இந்த ஐஸ்கிரீமில் உள்ளது?
கின்னஸ் உலக சாதனை அமைப்பின் தகவல்படி, இதில் இத்தாலியின் ஆல்பா பகுதியிலிருந்து வரும் சிறப்புவாய்ந்த வெள்ளை உணவுப்பொருள் சிலவை சேர்க்கப்படுகிறதாம். அதன் விலை கிலோவிற்கு இந்திய மதிப்பில் சுமார் ரூ.12 லட்சம் என்பதால் ஐஸ்கிரீமும் அதிக விலைக்கு விற்கப்படுகிறதாம். மேலும் இதில் Parmigiano Reggiano என்னும் பாலாடைக்கட்டி, sake lees எனும் கெட்டியான கிரீம் மற்றும் உண்ணக்கூடிய தங்க இலைகள் சேர்க்கப்படுகிறதாம்.
இதுகுறித்து கின்னஸ் இணையதளத்தில், செல்லட்டோ நிறுவனத்தின் நோக்கம் விலையுயர்ந்த ஐஸ்கிரீம் தயாரிப்பது மட்டும் அல்ல என்றும், அவர்கள் ஐரோப்பிய மற்றும் ஜப்பானிய பொருட்களின் கலவையைப் பயன்படுத்தி ஐஸ்கிரீமை உருவாக்க முயன்றுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனைச் செய்துமுடிக்க ஒசாகாவின் RiVi என்ற பிரபல ஃப்யூஷன் உணவகத்தின் தலைமை சமையல்காரரான தடாயோஷி யமடாவை செல்லட்டோ பணியமர்த்தியுள்ளது.
மேலும் இதுபற்றி, “ஐஸ்கிரீமின் ருசிபார்க்கும் அமர்வில் கலந்துகொண்ட செல்லட்டோவின் பணியாளர்கள், இதன் சுவை நன்றாக இருந்ததாகத் தெரிவித்தனர். வெள்ளை ட்ரஃபுல்லின் நறுமணம் தங்கள் வாய் மற்றும் மூக்கை நிரப்பியதாகவும் அவர்கள் கூறினர். மேலும் இதில் கலந்துள்ள Parmigiano Reggiano மற்றும் sake lees போன்றவையும் அவர்களை வெகுவாகக் கவர்ந்தது’’ என்று கின்னஸ் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


























