பொதுமக்களுக்குத்தான் பாதுகாப்பு இல்லை என்று பார்த்தால் கடவுள் கண்முன்னாக இருக்கும் பிரசாதப் பொருட்களுக்கும் பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறது. திருப்பதி கோவிலில் பிரசாத லட்டுக்களிலேயே கைவைத்து தங்களது திருட்டுவேலையைக் காட்டியுள்ளனர் சில ஊழியர்கள்.
மக்கள் அதிகம் கூடும் திருப்பதி வெங்கடாசலபதி கோயிலில், பக்தர்களுக்குக் கொடுக்கப்படவிருந்த பிரசாத லட்டுக்களில் 35,000 லட்டுக்களை அங்குள்ள ஊழியர்கள் திருடி அதிகவிலைக்கு விற்றுள்ளனர். பொதுவாக லட்டுக்கள், தயாரிக்கும் இடத்திலிருந்து வினியோகம் செய்யப்படும் கவுண்டர்களுக்கு தட்டுகள் மூலமாக கொண்டுசெல்லப்பட்டு பக்தர்களுக்கு தரப்படும்.
அப்படி, தயாரிக்கும் இடத்திலிருந்தே லட்டுக்களை திருடி அதிக விலைக்கு அங்குள்ள சில ஊழியர்கள் விற்பதாக கோவில் பறக்கும் படையினருக்கு தகவல் கிடைத்ததன் பேரில் ஆய்வு செய்யப்பட்டதில், 5 பேர் இத்திருட்டில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. அவர்கள் இதுவரை 35,000 லட்டுக்களை தட்டோடு திருடியுள்ளது கண்டிபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து 5 பேரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.


























