நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், ஜித்தன் ரமேஷ், செல்வராகவன், அனுமோல், ஐஸ்வர்யா தத்தா ஆகியோர் நடித்து திரையரங்குகளில் வெளியாகியுள்ள திரைப்படம் ‘ஃபர்ஹானா’. சமீபகாலமாக, ‘தி காஷ்மீர் பைல்ஸ்’, ‘தி கேரளா ஸ்டோரி’, ‘புர்கா’ போன்ற இஸ்லாமிய மதத்தைக் குறிவைத்து தாக்கும், அவர்களை பயங்கரவாதிகள் போலவும், மதமாற்றங்களில் ஈடுபடுபவர்கள் போலவும், மத அடிப்படைவாதிகள் போலவும் சித்தரிக்கும் படங்கள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்திவந்த நிலையில், இஸ்லாமியர்களின் வாழ்வியலைக் கொண்ட ’ஃபர்ஹானா’ படமும் சர்ச்சைக்கு வித்திட்டது.
இதன் டிரெய்லரில் இஸ்லாமியப் பெண்ணான ஐஸ்வர்யா ராஜேஷ், குடும்ப வறுமைநிலை காரணமாக கால் சென்டரில் வேலை செய்வது போல் சில மோசடிகளில் ஈடுபடுவது போன்ற காட்சிகள் வெளியாகி படத்திற்கு எதிரான மனநிலையை உருவாக்கியது. இப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியின் சந்திப்புகளில், ’ஃபர்ஹானா’ இஸ்லாம் குறித்து தவறாகச் சித்தரிக்கும் படம் இல்லை என்று இதன் இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் தொடர்ந்து வலியுறுத்திவந்த நிலையில், படமும் இன்று திரையரங்குகளில் வெளியாகிவிட்டது. உண்மையில் ’ஃபர்ஹானா’ படம் மதவெறுப்புக் கருத்துக்களைக் கொண்டு வெளியாகியுள்ளதா?
திரைவிமர்சகர்கள் மற்றும் படம் பார்த்த நெட்டிசன்களின் கூற்றுப்படி, ’ஃபர்ஹானா’ படத்தில் எந்த விதத்திலும் இஸ்லாம் குறித்த வெறுப்புப் பரப்புரைகளோ, தவறான சித்தரிப்புகளோ இடம்பெறவில்லை என்று கூறப்படுகிறது. குடும்ப வறுமை நிலை காரணமாக கால்சென்டரில் ஐஸ்வர்யா ராஜேஷ் பணிபுரிவது போலவும், அந்த அலுவலகத்தில் பணக்காரர்களைக் குறிவைத்து ரகசியமாக மேற்கொள்ளப்படும் ஆபாச மொபைல் பேச்சு மோசடி கும்பலிடம் தெரியாமல் இவர் சிக்கிக்கொள்வது போலவும், அதனூடான சமூக அக்கறை நிறைந்த ஒரு செய்தியுடன் படம் முடிவடைவது போலவும் காண்பிக்கப்பட்டுள்ளதாகவும், சாதாரண பெண்களின் வாழ்வியல் சிக்கல்கள் போலத்தான் இதிலும் காட்சிகள் இடம்பெற்றுள்ளதாகவும் விமர்சனங்கள் வாயிலாகத் தெரியவந்துள்ளது.
எனவே, ’தி காஷ்மீர் பைல்ஸ்’, ’தி கேரளா ஸ்டோரி’ போன்று இஸ்லாமிய மதத்திற்கு எதிரான எந்த மதவெறுப்புக் காட்சிகளும் இதில் இல்லை என்றும், பொழுதுபோக்கு நோக்கத்துடன் இந்தப்படம் பார்க்க விருப்பப்படுவோர் தாராளமாக திரையரங்குகளில் ’ஃபர்ஹானா’ படத்தைக் காணலாம் என்றும் விமர்சனங்கள் வாயிலாகக் கூறப்படுகிறது.


























