ஆஸ்திரேலியாவில் புகைபிடித்தலைக் கட்டுப்படுத்த புகையிலை மற்றும் புகைபிடிக்கும் கருவிகளின் மீது அடுத்த நான்கு ஆண்டுகளில் பில்லியன் டாலர்கள் அளவுக்கு வரி விதிக்கப்படவிருப்பதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
அடுத்த தலைமுறையினர் நிகோடினுக்கு அடிமையாவதைத் தடுக்கவேண்டி, பொழுதுபோக்கிற்காக இளைஞர்கள் மத்தியில் பெருகியிருக்கும் புகைப்பழக்கத்தைத் தடைசெய்ய இவ்வாறான செயல்பாடுகளை நடைமுறைப்படுத்தவிருப்பதாக அந்நாட்டு சுகாதார அமைச்சர் மார்க் பட்லர் தெரிவிக்கிறார்.
முதற்கட்டமாக புகையிலை மீதான வரி வரும் செப்டம்பரிலிருந்து 5% உயர்த்தப்படும் என்றும், இது படிப்படியாக அடுத்த நான்கு ஆண்டுகளில் 3.3 பில்லியன் ஆஸ்தி. டாலர்கள் அளவுக்கு உயர்த்தப்படும் என்றும் பட்லர் தெரிவித்துள்ளார். இதுமட்டுமின்றி இ-சிகரெட்டுகளின் விற்பனையை குறைத்தும், அவற்றின் மீதான தரக்கட்டுப்பாடுகளை அதிகரித்தும் அதன் புழக்கத்தைக் குறைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாக பட்லர் கூறுகிறார்.
வாப் எனப்படும் பேட்டரி மூலம் பயன்படுத்தப்படும் புகையிலைப் பொருட்களின் உற்பத்தி அங்குள்ள குழந்தைகளை இலக்காகக்கொண்டு தயாரிக்கப்படுவதாகவும், பெரும்பாலும் பள்ளி மாணவர்களிடையே இந்த புகைப்பழக்கம் அதிகரித்திருப்பதாகவும், இவை நிறுத்தப்படவேண்டும் என்றும் பட்லர் வேதனை தெரிவிக்கிறார்.
Alcohol and Drug Foundation-ன் தலைமை நிர்வாக அதிகாரி எரின் லாலர் கூறுகையில், ஆஸ்திரேலியாவில் வாப்பிங் செய்யும் பெரும்பாலான மக்கள் அவற்றில் என்ன இருக்கிறது என்றுகூட தெரியாமல் கட்டுப்பாடுகளுக்கு உட்படாதவாறு தயாரிக்கப்படும் பொருட்களைப் பயன்படுத்துவதாக குற்றம்சாட்டுகிறார். மேலும் அவர் சிறியவர் முதல் பெரியவர்கள் வரை வாப்பிங்கால் நிக்கோடினை உட்கொள்வது பற்றி தெரியாமலேயே அதற்கு அடிமையாவதாகவும் கவலை தெரிவிக்கிறார்.
சுமார் 63 மில்லியன் ஆஸ்தி. டாலர்கள் செலவில் புகைபிடிப்பதை நிறுத்தக்கோரும் பொது சுகாதார விழிப்புணர்வு பரப்புரைகள் அங்கு முன்னெடுக்கபடவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அங்குள்ள பழங்குடியின மக்களிடையே இந்தப் பரப்புரையை மேற்கொள்ள 140 மில்லியன் ஆஸ்தி. டாலர்கள் செலவுசெய்யத் திட்டமிடப்பட்டுள்ளதாம்.
2019ம் ஆண்டின் தரவுகளின்படி, 15 வயதுக்கு மேற்பட்டவர்களில் 11.2% என்ற புகைபிடிப்போர் சதவீதத்துடன், ஆஸ்திரேலியா குறைந்த அளவில் புகைபிடிப்போர் நாடுகளில் ஒன்றாக இருக்கிறது.


























