பிக்பாஸ் மூலம் பிரபலமடைந்த விஜயகுமார் மற்றும் மஞ்சுளா ஆகிய நட்சத்திரத் தம்பதியரின் மகளான சர்ச்சை நாயகி வனிதா விஜயகுமார் கடந்த 2020ம் ஆண்டு பீட்டர் பால் என்ற நபரை மூன்றாவதாகத் திருமணம் செய்துகொண்டார்.
ஏற்கனவே குடும்பத்தாருடன் ஏற்பட்ட பிரச்சினை, முதல் இரண்டு கணவர்களிடமிருந்து கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்த வேதனை ஆகியவற்றுடன் உழன்றுவந்த வனிதா விஜயகுமார், பிக்பாஸ் போட்டியாளராகப் பங்கேற்றபிறகு சற்றே அனைவராலும் கவனிக்கப்பட்டு, மீண்டும் பிரபலமாகி சினிமா, தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் என்று பிசியாக இருந்துவந்தார். அந்த சமயத்தில் தான், தான் துவங்கிய சமையல் தொடர்பான யூடியூப் சேனலுக்கு எடிட்டிங் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளவந்த பீட்டர் பால் என்பவருடன் நெருக்கம் ஏற்பட்டு அவரைத் திருமணம் செய்துகொண்டார்.
இ ந் நிலையில், பீட்டர் பால் மது, புகை உள்ளிட்ட போதை வஸ்துக்களை அதிகம் பயன்படுத்துவதாகவும், அதைக் கண்டித்தும் அவர் கேட்கவில்லை என்றும் இருவருக்குள்ளும் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, இருவரது மணவாழ்க்கையும் துவங்கிய சில காலத்திலேயே முடிந்துபோனது. பின் இருவரும் அவரவர் வாழ்க்கையைக் கவனிக்கச் சென்றுவிட்டனர்.
இந்நிலையில், அதிர்ச்சியுறும்விதமாக அண்மையில், உடல் நிலை பாதிக்கப்பட்டு பீட்டர் பால் இறந்துவிட்டதாக செய்திகள் வெளியாகின. இதற்கு எந்தவித இரங்கலோ அல்லது இதுகுறித்து கருத்தோ தெரிவிக்காமலிருந்த வனிதா, தற்சமயம் தனக்கும் அவருக்கும் திருமணமே ஆகவில்லை என்று பெரிய குண்டாகத் தூக்கிப் போட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் ட்விட்டரில் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ’’மிகுந்த பொறுமைக்கும், பேசலாமா? வேண்டாமா? என்ற தயக்கத்திற்கும் பிறகு இந்தச் செய்தியை பத்திரிக்கைகளுக்குத் தெரியப்படுத்துகிறேன். சட்டப்படி நான் பீட்டர் பாலைத் திருமணம் செய்துகொள்ளவில்லை. நான் அவரது மனைவியுமில்லை; அவர் என்னுடைய கணவருமில்லை. நான் சட்டப்படி ஒரு திருமணமாகாத பெண். ஆகவே எந்த இழப்பை எண்ணி நான் வருந்தவேண்டிய அவசியமில்லை. நான் இப்பொழுது என்னுடைய வாழ்வை நிறைவாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ்ந்துவருகிறேன். பீட்டர் பால் எனது கணவர் என்ற தவறான செய்தியை இனி யாரும் பரப்பவேண்டாம். இதுவே என்னுடைய தாழ்மையான வேண்டுகோள்’’ என்று கூறியுள்ளார்.


























