தெற்கு கலிபோர்னியா பகுதியைச் சேர்ந்த ஒரு நபர் தனது வீட்டின் காலிங் பெல்லை விளையாட்டாக அடித்த சிறுவர்கள் 3 பேரை கொலை செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து, இதற்குக் காரணமான இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அனுராக் சந்திரா என்ற நபர் மீது ரிவர்சைடி கவுண்டி நீதிமன்றத்தில் 3 கொலை மற்றும் 3 கொலை முயற்சி ஆகிய பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டு, அவர் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் கடந்த 2020 ஜனவரி 19ல் நடந்துள்ளது. சம்பவத்தன்று 3 சிறுவர்கள் அனுராக்கின் வீட்டு காலிங் பெல்லை அடித்துவிட்டு அவர் கண்ணெதிரே வெளியே ஓடியுள்ளனர். ஏற்கனவே 12 பீர்களை அருந்தி அதீத குடிபோதையில் இருந்துள்ள அனுராக்கிற்கு சிறுவர்களின் இச்செயல் கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து, அவர்களை அனுராக் துரத்திச் சென்றுள்ளார்.
அவரிடமிருந்து தப்பிக்க சிறுவர்கள் இருந்த கார் வேகமாக இயங்கியுள்ள நிலையில், டெமஸ்கல் என்ற பள்ளத்தாக்கிலிருந்த மரத்தின் மீது கார் பயங்கரமாக மோதியுள்ளது. இதில் காரில் பயணித்த 3 சிறுவர்கள் சம்பவ இடத்திலேயே பலியான நிலையில், காரிலிருந்த 13 வயது மற்றும் 18 வயது இளைஞர்கள் தப்பியுள்ளனர். உயிரிழந்த 3 சிறுவர்களும் 16 வயதிற்குட்பட்டவர்கள் என்று தெரியவருகிறது.
ஏற்கனவே அனுராக் குடும்ப வன்முறை உள்ளிட்ட வழக்குகளை சந்தித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், வேண்டுமென்றே சிறுவர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தவேண்டும் என்ற எண்ணத்தில் அவர்களைத் துரத்திக் கொன்றதாக அனுராக் மீதான வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.


























