தண்ணீரின் விலையானது, அதன் மூலம், சுத்திகரிப்பு, விநியோகம் மற்றும் குறிப்பிட்ட இடத்தில் அதன் இருப்பு போன்ற பல்வேறு காரணிகளைப் பொறுத்து மாறுபடும். சில பகுதிகளில், தண்ணீர் பற்றாக்குறை அல்லது அதிக தேவை போன்ற காரணங்களால் விலை அதிகமாக இருக்கலாம். சில பகுதிகளில், அதிக விநியோகம் காரணமாக விலை மலிவாகவும் இருக்கலாம்.
இந்தியா போன்ற நாடுகளில் அரசு சார்பில் தண்ணீர் இலவசமாக விநியோகிக்கப்படவேண்டும் என்றாலும் தனியார் நிறுவனங்களால் தண்ணீர் விற்பனை செய்யப்படுவதும் நடைபெறத்தான் செய்கிறது. அத்தியாவசியத் தேவையான தண்ணீர் இலவசமாக எல்லா தரப்பினருக்கும் கிடைக்கவேண்டும் என்ற குரல்களுக்கு மத்தியில், தலை சுற்றவைக்கும் விலைக்கு உலகின் பிற நாடுகளில் தண்ணீர் விற்பனை செய்யப்படும் செய்தி அதிரவைக்கிறது. Acqua di Cristallo Tributo a Modigliani என்ற நீளமான பெயரைக் கொண்ட அந்தத் தண்ணீரின் விலை ரூ.45 லட்சம்.
இது 2010ம் ஆண்டு விலை உயர்ந்த தண்ணீர் பாட்டில் என்று கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்றது. இதில் இருக்கும் 750 மி.லி. தண்ணீர் முழுக்க முழுக்க திடமான 24 காரட் தங்கத்தால் ஆனதே இதன் அதிக விலைக்குக் காரணம். உலகெங்கிலும் உள்ள கோடீஸ்வரர்கள் இந்த தண்ணீரை குடிப்பதாக கூறப்படுகிறது.
உலகின் மிக விலையுயர்ந்த நீரான இதில் 5 கிராம் 24 காரட் தங்கம் சேர்க்கப்பட்டுள்ளது. ஆகவே இந்த தண்ணீர் அதிக காரத்தன்மையுடையதாக இருக்கிறது. இதில் உள்ள தண்ணீர் பிரான்சில் உள்ள ஒரு நீரூற்றின் தண்ணீரையும், பிஜியில் உள்ள ஒரு நீரூற்றின் தண்ணீரையும், ஐஸ்லாந்தின் உறைபனி பனிப்பாறைகளிலிருந்து சேகரிப்பட்ட தண்ணீரையும் கொண்டுள்ளது. சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்னதாக மார்ச் 4, 2010 அன்று Acqua di Cristallo Tributo a Modigliani தண்ணீர் பாட்டில் 60,000 அமெரிக்க டாலர்களுக்கு ஏலம் விடப்பட்டது.
Fernando Altamirano என்பவரால் இந்த நீர் உருவாக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி உலகின் அதிக விலையுள்ள தண்ணீர் பாட்டிலையும் இவர் உருவாக்கியுள்ளார். இவை தவிர கோனா நிகாரி என்ற பெயருடைய, ஜப்பானின் கடலிலிருந்து பல ஆயிரம் அடிக்கு கீழிருந்து எடுக்கப்படும் தண்ணீரும் அதிக விலையுடையது என்பது குறிப்பிடத்தக்கது.


























