மே 5ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள ’தி கேரளா ஸ்டோரி’ படத்தை திரையிட தடைவிதிக்க வேண்டும் என அரசியல் கட்சிகள் மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றன.
சுதிப்தோ சென் இயக்கத்தில், விபுல் அம்ருத்லால் ஷா தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ’தி கேரளா ஸ்டோரி’. சில தினங்களுக்கு முன்பாக வெளியான இத்திரைப்படத்தின் டிரெய்லர் இந்தியா முழுக்கவே பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. கேரளாவில் ஆட்சியிலுள்ள கம்யூனிஸ்ட், காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் சர்ச்சைக்குரிய உள்ளடக்கங்கள் இருக்கும் இப்படத்தின் திரையிடலை தடைசெய்ய பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான மத்திய அரசை கடுமையாக வலியுறுத்திவருகிறது.
டிரெய்லரின் காட்சிகளின் அடிப்படையில், ISIS பயங்கரவாத அமைப்பின் தொடர்பிலிருக்கும் ஒரு இஸ்லாமிய பெண், கல்வி கற்க ஒரு கல்லூரியில் சேருவது போலவும், தனது ஹாஸ்டல் அறை தோழிகளிடம் இஸ்லாம் குறித்து தொடர் பரப்புரை மேற்கொண்டு அவர்களை இஸ்லாமியர்களாக மாற்றத் துடிப்பது போலவும், பின் அவர்களை ISIS அமைப்பில் சேர்த்துவிடப் பாடுபடுவது போலவும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. மேலும் கேரளாவில் பலரும் தொடர்ந்து இந்து மதத்திலிருந்து இஸ்லாமிற்கு மாற்றப்படுவதாகவும் மாபெரும் குற்றச்சாட்டை இப்படம் முன்வைக்கிறது.
இந்நிலையில், டிரெய்லரைப் பார்த்த பலரும், இப்படம் இஸ்லாமிய சமூகத்தின் மீது வெறுப்பை பரப்பக்கூடிய நோக்கத்தில் எடுக்கப்பட்டுள்ள படம் என்றும், படத்தின் உள்ளடக்கங்கள் ISISல் வெகுஜன ஆட்சேர்ப்பு, மத மாற்றம் மற்றும் ‘லவ் ஜிஹாத்’ ஆகியவற்றைச் சுற்றி வருகின்றன என்றும் கூறுகின்றனர். மேலும் இப்படத்தை பலரும் மத வெறுப்பை போதிக்கும் “பிரசாரப் படம்” என்று அழைக்கிறார்கள்.
தணிக்கை குழுவிடமிருந்து எந்தவித ஆட்சேபனையும் இன்றி தணிக்கை செய்யப்பட்டுள்ள இப்படம் இம்மாதம் 5ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. ஆயினும் தொடர்ந்து எதிர்ப்புக்குரல்கள் வலுத்துவருவதால் படம் கடைசி நேரத்தில் தடைசெய்யப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.


























