ஓரினச்சேர்க்கை திருமணங்களை சட்டப்பூர்வமாக சரி செய்யக் கோரிய மனுக்களை உச்சநீதிமன்றம் விசாரித்து வரும் நிலையில், 10 நாட்களுக்குள் தங்கள் கருத்தை தெரிவிக்குமாறு மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது. உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட புதிய பிரமாணப் பத்திரத்தில், இந்த விவகாரத்தில் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை கட்சிகளாக கருத்தில் கொள்ள மத்திய அரசு கேட்டுக் கொண்டது மட்டுமில்லாமல், இந்த பிரச்சினை மாநிலங்களின் சட்டமன்றக் களத்திற்குள் வருகிறது என்றும் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, ’’இந்த வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது மற்றும் மனுதாரர்களின் வாதங்கள் தொடங்கியுள்ளன. அதன்படி, மத்திய மற்றும் மாநில அரசுகளின் நிலைப்பாட்டை தாமதமின்றி சரியான முறையில் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் பத்து நாட்களுக்குள் உங்கள் கருத்துக்களை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்று அனைத்து மாநில தலைமைச் செயலாளர்களுக்கும் மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது.
இந்த விஷயத்தில் முடிவெடுப்பதற்கு, தற்போதுள்ள சமூக பழக்கவழக்கங்கள், நடைமுறைகள், மதிப்புகள், விதிமுறைகள், மேலும், மாநில விதிகள் மற்றும் இது போன்ற “சமூகத்தின் பல்வேறு பிரிவுகளில் நடைமுறையில் இருப்பவை” ஆகியவற்றின் மாற்றங்களை மதிப்பீடு செய்ய வேண்டும் என்று மத்திய அரசு மாநில அரசுகளுக்குக் கூறியது
இந்த விவகாரத்தைத் திறம்பட தீர்ப்பதற்கு அனைத்து மாநில அரசுகளின் கருத்துகளையும் உள்ளடக்கிய “ஒன்றுகலந்த மற்றும் ஒருங்கிணைந்த பார்வை” நீதிமன்றத்தில் முன்வைக்கப்படுவது முக்கியம் என்று மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது.
ஓரினச்சேர்க்கை திருமணங்களுக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் கோரும் மனுக்கள் மீதான நடவடிக்கைகளில் மாநிலங்களை கட்சிகளாக இணைத்து கருத்துகளில் கவனம் கொள்ளுமாறு உச்சநீதிமன்றத்திடம் மத்திய அரசு கோரிக்கை வைத்துள்ளது. இந்த கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்ததை அடுத்து, மாநிலங்களுடன் கலந்தாலோசிக்கும் செயல்முறையை ஏற்கனவே தொடங்கியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்த வழக்கில் மாநிலங்களை ஒரு கட்சியாகக் கொண்டு கருத்து தெரிவிக்க அனுமதிக்கவில்லை என்றாலும், மாநிலங்களின் கருத்துக்களாக நீதிமன்றத்தில் முன்வைக்க அனுமதிக்க வேண்டும் என்று மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.


























