அதானி குழுமம் குறித்து ஹிண்டன்பெர்க் நிறுவனம் வெளியிட்ட ஆய்வறிக்கை பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், புதிய அறிக்கை ஒன்றை விரைவில் வெளியிடவிருப்பதாக அந்நிறுவனம் ட்விட்டரில் தெரிவித்துள்ளது.
சமீபத்தில் இந்தியாவில் மிகப்பெரும் அதிர்வலைகளைக் கிளப்பிய நிகழ்வுகளில் ஒன்று அதானி குழுமம் குறித்த ஹிண்டன்பெர்கின் அறிக்கை. இந்தியாவின் முக்கிய தொழிலதிபர்களின் ஒருவரான குஜராத்தைச் சேர்ந்த கௌதம் அதானியின் அதானி குழும நிறுவனங்கள் வரி ஏய்ப்பு, பரிவர்த்தனை மோசடி உள்ளிட்ட முறைகேடுகளில் ஈடுபட்டது குறித்து அமெரிக்காவின் ஆய்வு நிறுவமனான ஹிண்டன்பெர்க் வெளியிட்ட ஆய்வறிக்கை அதானியை ஆட்டம் காணவைத்தது.
இந்த அறிக்கை வெளியாவதற்கு முன்புவரையும் தொடர்ந்து தனது நிறுவனம் மூலமான வணிகங்களில் வளர்ச்சியைச் சந்தித்து உலகின் 3வது பெரும் பணக்காரராக உயர்ந்த அதானி, இந்த அறிக்கைக்குப் பின் அதல பாதாளத்திற்கு வீழ்ந்தார். அதானி குழுமத்தில் இந்தியா மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த பெரும் பெரும் நிறுவனங்கள் முதலீடு செய்திருந்த நிலையில், அவற்றின் முதலீடு கேள்விக்குறியாகிப் போனது. இந்த அறிக்கை மூலம் அதானி உலக பணக்கார்கள் பட்டியலில் 3ம் இடத்திலிருந்து 22ம் இடத்திற்கு இறங்கினார். மேலும் அவரது பங்குகள் அனைத்தும் தொடர் சரிவைக்கண்டன. இன்னமும் இந்த சர்ச்சையிலிருந்து அவரால் மீள முடியாத அளவுக்கு கடும் நெருக்கடியில் அவர் சிக்கியுள்ளார். முதலீடு செய்த நிறுவனங்கள் தங்கள் முதலீட்டுத் தொகையை கேட்டு நிர்பந்திக்கத் தொடங்கியுள்ள நிலையில், விழிபிதுங்கி நிற்கிறார் அதானி.
விஷயம் இப்படி இருக்க, தனது அடுத்த பாய்ச்சலுக்கு தயாராக உள்ளதாக ஹிண்டன்பெர்க் நிறுவனம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது பலருக்கு அடிவயிற்றில் புளியைக் கரைத்துள்ளது. இதுகுறித்து ஹிண்டன்பெர்க் தனது ட்விட்டர் பக்கத்தில் ’புதிய அறிக்கை விரைவில் – அடுத்த மிகப்பெரிய ஒன்று’ என்று குறிப்பிட்டுள்ளது. இது தொழிலதிபர்கள் மத்தியில் கிலிகிளப்பியுள்ளது. முந்தைய அறிக்கை அதானி குழுமத்தை ஒரு வழி பண்ணியதைப் போல் இந்த அறிக்கை எந்த தொழிலதிபரை, அவரது நிறுவனத்தைக் குறித்ததாக இருக்கும் என்ற ஐயம் எல்லோரிடத்திலும் எழுந்துள்ளது.
இதற்கான கருத்துகளில், ஹிண்டன்பெர்க்கின் அடுத்த அறிக்கை அமெரிக்க வங்கிகள் சார்ந்ததாக இருக்கலாம் என்று நெட்டிசன்கள் குறிப்பிட்டுவருகின்றனர். மேலும், ஹிண்டன்பெர்க்கின் பார்வை இந்தியத் தொழிலதிபர்கள் மீதே தற்சமயம் உள்ளதாகவும், அதானியைத் தொடர்ந்து அம்பானி குறித்த அறிக்கையாக அது இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.


























