கோவையில் புலம்பெயர் வடமாநிலத் தொழிலாளர்களைத் தாக்கிய இந்து முன்னணி அமைப்பினர் உள்ளிட்ட 4 பேரை வெரைட்டிஹால் பகுதி காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர்.
தமிழ்நாட்டில் வடமாநிலத் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக தொடர்ந்து வதந்திகள் பரப்பப்பட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. இதுகுறித்த உண்மை நிலையை பொதுமக்களுக்குத் தெரியப்படுத்த வடமாநிலத் தொழிலாளர்கள் தாங்கள் பாதுகாப்பாக இருப்பது குறித்து பேசும் காணொலிகளை தமிழக காவல்துறை வெளியிட்டு அதற்கு எதிராக நடவடிக்கைகள் எடுத்துவருகின்றது.
நிலைமை இப்படி இருக்க, மீண்டும் இச்சர்ச்சையை ஊதிப் பெரிதாக்கும் விதமாக கோவையில் வடமாநிலத் தொழிலாளர்கள் சிலர் தாக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
கோவையில் பணிபுரியும் மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்த கௌதம் சியால் என்ற நபர், தனது நண்பர்களுடன் அங்குள்ள இடையர் தெருவில் நடந்து செல்லும்போது அவ்வழியாக இந்து முன்னணி அமைப்பினர் சூரிய பிரகாஷ், பிரகாஷ் மற்றும் கல்லூரி மாணவர்களான பிரகதீஷ், வேல்முருகன் ஆகியோர் வந்துள்ளனர். அப்போது தங்களுக்கு வழிவிடாமல் சென்றதாகக் கூறி வடமாநிலத் தொழிலாளர்களை சூரிய பிரகாஷ் உள்ளிட்ட நால்வர் சரமாரியாகத் தாக்கியுள்ளனர்.
மேலும் அங்குள்ள பானிபூரி கடையில் பணிபுரியும் இரு வடமாநிலத்தவர்களையும் இந்நால்வர் தாக்கியுள்ளனர். இதைத்தொடர்ந்து விஷயமறிந்த மேற்குவங்கத் தொழிலாளர்கள் பலரும் அங்கு கூடியுள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து இச்சம்பவம் குறித்து கௌதம் சியால் கோவை, வெரைட்டிஹால் பகுதி காவல் நிலையத்தில் புகாரளிக்கவே காவலர்கள் விரைந்து சூரியபிரகாஷ் உள்ளிட்ட நால்வர் மீதும் வழக்குப்பதிவு செய்து அவர்களைக் கைதுசெய்துள்ளனர். மேலும் அவர்களின் இரண்டு இருசக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்துள்ளனர். இச்சம்பவத்தை அடுத்து, கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் மேற்குவங்க புலம்பெயர் தொழிலாளர்களைச் சந்தித்து கலந்துரையாடினார்.


























