விழா ஒன்றில் பங்கேற்கச் சென்ற தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கால் தடுமாறி கீழே விழுந்த நிலையில், அதுகுறித்து நகைச்சுவையாக அவர் பேசிய காணொலி வைரலாகி வருகிறது.
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் மாணவர்கள் உருவாக்கிய மாதிரி ராக்கெட் ஏவுதல் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக வந்த தெலங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான தமிழிசை சவுந்தர்ராஜன், கால் இடறி கீழே தடுமாறி விழுந்தார். இதைத்தொடர்ந்து அவரைச் சுற்றியிருந்த பாதுகாப்பு அதிகாரிகள் அவரைத் தாங்கிப் பிடித்து எழுப்பினர்.
இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம் பழனியில், அரிமா சங்க மதுரை மண்டல மாநாடு விழாவில் பங்கேற்ற தமிழிசை சவுந்தர்ராஜன், இந்நிகழ்வு குறித்து நகைச்சுவையாக மேடையில் பேசினார். இக்காணொலி தற்சமயம் வைரலாகி வருகிறது.
இதுகுறித்து நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய தமிழிசை சவுந்தரராஜன், ”6,000 குழந்தைகள் பங்கேற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது கால் இடறி கீழே விழுந்தேன். கீழே விழுவது என்பது இயல்பான ஒன்றுதான். ஆனால் அதை பெரிய செய்தியாக ஊடகங்கள் வெளியிட்டதால் பலரும் என்னிடம் நலம் விசாரித்தனர். நான் விழுந்து விழுந்து வேலை செய்தால் தொலைக்காட்சியில் வராது. ஆனால் நான் விழுந்தால் பெரிய செய்தியாக தொலைக்காட்சியில் வருகிறது” என்று நகைச்சுவையாகப் பேசினார். இதனால் அரங்கம் அதிர்ந்தது.
மேலும் பேசிய அவர், ”தெலங்கானாவில் நன்கு படிக்கும் ஏழை மாணவர் ஒருவர் என்னைத் தொடர்புகொண்டு படிப்புக்காக தனக்கு லேப்டாப் ஒன்று தேவைப்படுவதாகக் கூறவே அவருக்கு லேப்டாப் ஒன்று வாங்கிக் கொடுத்தேன். பின் அவர் என்னை மீண்டும் தொடர்புகொண்டு லேப்டாப் மூலம் நன்கு படித்து நல்ல மதிப்பெண் பெற்றுள்ளதாகக் கூறினார். எனவே உங்களிடம் பயன்படுத்தக்கூடிய அளவிலான லேப்டாப்கள் உங்களுக்குப் பயனில்லாமல் இருந்தால் என்னிடம் கொண்டுவந்து கொடுங்கள்” என்றும் பேசினார்.


























