நகைச்சுவை நடிகர் மயில்சாமிக்கு அஞ்சலி செலுத்திய நடிகர் ரஜினிகாந்த் மயில்சாமியின் கடைசி ஆசையை தான் நிறைவேற்றிவைப்பதாக செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
தனது தனித்துவமான நகைச்சுவை பாணியால் தமிழ் சினிமா ரசிகர்கள் பலராலும் கொண்டாடப்பட்ட நடிகர் மயில்சாமி. சமூக சிந்தனையுள்ள பல நகைச்சுவை காட்சிகளில் நடித்துள்ள இவர், குணச்சித்திர வேடங்களிலும் நடித்து அசத்தியவர்.
கடந்த 18ம் தேதி மகாசிவராத்திரி தினத்தன்று இரவு கேளம்பாக்கத்தில் உள்ள சிவன் கோவிலில் டிரம்ஸ் கலைஞர் சிவமணியுடன் பூஜையில் கலந்துகொண்டு விடிய விடிய விழித்திருந்து, நேற்று அதிகாலை வீடு திரும்பிய நிலையில், திடீர் நெஞ்சுவலி காரணமாக அவர் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டும், வழியிலேயே அவர் உயிர் பிரிந்தது. இச்செய்தி திரை உலகினரையும், அவரது ரசிகர்களையும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
இந்நிலையில், சாலிகிராமத்திலுள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ள உடலுக்கு நடிகர்கள் ரஜினிகாந்த், எம்.எஸ்.பாஸ்கர், சத்யராஜ், சித்தார்த், செந்தில், சதீஷ், விஜய் சேதுபதி உள்ளிட்ட திரையுலகினரும், முதல்வர் மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், ஜி.கே.வாசன். எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அரசியல் பிரபலங்களும் அஞ்சலி செலுத்தினர்.
சிவனின் தீவிர பக்தரான, எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகரான மயில்சாமி, ஒரு நடிகராக மட்டுமில்லாமல் பிறருக்கு உதவும் இயல்பு கொண்டவராகத் திகழ்ந்தவர். இவரது அஞ்சலியில் கலந்துகொண்ட பல்வேறு பிரபலங்களும் இதைக் குறிப்பிட்டு கண்ணீர் சிந்தியது காண்போரின் மனதை கனக்கச் செய்தது.
இந்நிலையில், மயில்சாமியின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய நடிகர் ரஜினிகாந்த், அவரது இறுதி ஆசையை தான் நிறைவேற்றிவைப்பதாக உறுதியளித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த், ”மயில்சாமி மிமிக்ரி செய்து அதன் மூலம் நடிகராக மாறியவர். அவர் ஒரு மிகச்சிறந்த சிவபக்தர். என்னை அவர் சந்திக்கும்போதெல்லாம் எம்.ஜி.ஆர்., சிவனைப் பற்றி மட்டுமே பேசுவார். மயில்சாமியின் கடைசி ஆசையான மேகநாதேஸ்வரன் திருக்கோவிலின் சிவலிங்கத்திற்கு பாலாபிஷேகம் செய்வதை நான் நிறைவேற்றுவேன்” என்று உருக்கமாகப் பேசினார்.


























