கொரோனா கட்டுப்பாடுகள் அக்டோபர் 31ஆம் தேதி காலை 6 மணி வரை தொடர்ந்து தமிழகத்தில் அமலில் இருக்கும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. அத்துடன், 1 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான வகுப்புகளுக்கான பள்ளிகள் நவம்பர் 1 முதல் இயங்கும் என முதலமைச்சர் அறிவித்துள்ளார்.
கொரோனா நோய்த் தொற்று பரவலைத் தொடர்ந்து கண்காணித்து கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, எதிர்வரும் பண்டிகைக் காலங்களில் பொதுமக்கள் அதிகம் கூடுவதன் காரணமாக, கொரோனா நோய்த் தொற்று பரவக்கூடும் என்பதைக் கருத்தில் கொண்டும், நோய்த் தொற்று பரவலைக் கண்காணித்து தொடர்ந்து கட்டுப்படுத்த வேண்டிய அவசியத்தை கருத்தில் கொண்டும் முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.
இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், சமுதாயம், அரசியல், கலாச்சாரநிகழ்வுகள், திருவிழாக்கள், குடமுழுக்கு உள்ளிட்ட செயல்பாடுகளுக்கு ஏற்கெனவே விதிக்கப்பட்ட தடை தொடர்ந்து நடைமுறையில் இருக்கும். நோய்த்தொற்று பரவாமல் இருக்க பெருமளவில் மக்கள் ஒன்று கூடக்கூடிய நாட்களாகிய வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய கிழமைகளில் அனைத்து வழிபாட்டு தலங்களும் தொடர்ந்து மூடப்பட்டு இருக்கும்.
மேலும், ஏற்கெனவே அனுமதிக்கப் பட்டுள்ள செயல்பாடுகள், விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளுடன் தொடர்ந்து அனுமதிக்கப்படும். பொதுமக்கள், தங்களது குறைகளுக்கு தீர்வு காணும் பொருட்டு, பல்வேறு மாவட்டங்களிலிருந்து சென்னைக்கு வருகை புரிந்து தலைமைச் செயலகத்தில் தங்களது கோரிக்கை மனுக்களை சமர்ப்பித்து வருகின்றனர்.
பொதுமக்களின் சிரமத்தை குறைக்கும் நோக்குடன், அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில், திங்கட்கிழமை தோறும், பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள், மாதந்தோறும் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் ஆகியவற்றைகொரோனா நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி நடத்த அனுமதிக்கப்படுகிறது.

மருத்துவநிபுணர்கள், கல்வியாளர்கள், பெற்றோர்களின் ஆலோசனையின்படி, 9,10,11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவ-மாணவிருக்காக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. அதேபோல், 1ஆம்வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு பயிலும் மாணவ மாணவியர், பள்ளி செல்லாமல் பலமாதங்களாக தொடர்ந்து வீட்டிலேயே இருப்பது அவர்களிடையே பெரும் மனஅழுத்தத்தையும் சமுதாயத்தில் பெரும் கற்றல் இடைவெளியையும் இழப்பையும் ஏற்படுத்தியுள்ளதாக மருத்துவ வல்லுநர்கள், கல்வியாளர்கள், பெற்றோர்கள் தெரிவித்ததைக் கருத்தில் கொண்டு, அனைத்துபள்ளிகளிலும், 1 ஆம் வகுப்புமுதல் 8-ஆம் வகுப்பு மாணவ மாணவியருக்கான வகுப்புகள், கொரோனா நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி 01-11-2021 முதல் நடத்த அனுமதிக்கப்படும். அதற்கான முன்னேற்பாடுகளை பள்ளிக்கல்வித்துறை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளது.
இந்நிலையில் கிட்டதட்ட ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பள்ளிக்கூடம் செல்வது குறித்து தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி மாணவர்களும் அவர்களின் ஆசிரியர்களும் பெற்றோரும் மகிழ்ச்சி தெரிவித்து வருகிறார்கள்.
























