இந்தியாவின் துடிப்புமிக்க இளம் அரசியல்வாதிகளாக அறியப்படும் கன்னையாகுமார் மற்றும் ஜிக்னேஷ் மேவானி ஆகியோர் ராகுல் காந்தி தலைமையில் இன்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் இளம் தலைவர்களில் ஒருவராக செயலாற்றி வந்தவர் கன்னையா குமார். மாணவர்களைத் திரட்டி போராட்டங்களை ஒருங்கிணைத்ததன் வாயிலாக இந்தியா முழுவதும் கவனம் பெற்றார். அவரும், குஜராத் மாநிலத்தின் சுயேட்சை எம்.எல்.ஏ வான ஜிக்னேஷ் மேவானியும் இந்திய அரசியல் தளத்தில் இளம் பாய்ச்சல்களாகக் கருதப்பட்டனர்.
இருவரும் ஆளும் மோடி அரசுக்கெதிராக தீவிரமாக குரல் எழுப்பியதன் வாயிலாக நன்கு அறியப்பட்டார்கள். அவர்கள் இருவரும் காங்கிரஸ் கட்சியில் இணையவிருப்பதாக தகவல்கள் வெளியான வண்ணம் இருந்தன. இந்நிலையில் தில்லியில் உள்ள டெல்லி ஷஹீத்-இ-ஆஸம் பகத் சிங் பூங்காவில் ராகுல் காந்தி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்குபெற்ற கன்னையா குமார் மற்றும் ஜிக்னேஷ் மேவானி ஆகிய இருவரும் காங்கிரஸில் இணைந்தனர். இதனையடுத்து, பாஜகவுக்கு எதிரான மாற்று சக்திகள் காங்கிரஸ் தலைமையில் ஒன்று கூடுகின்றன என்கிற குரல் பரவலாக எழுந்துள்ளது.
























