டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கும் இடையே போட்டி நடந்து வரும் நிலையில் டெல்லி அணியை 9 விக்கெட் இழப்புக்கு 127 ரன்களுக்குள் சுருக்கியது கொல்கத்தா அணி.
டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்து வீச்சைத் தேர்வு செய்தது. டெல்லி கேபிடல்ஸ் அணி பேட்டிங் மற்றும் பவுலிங் இரண்டிலுமே சிறந்து விளங்கக்கூடிய அணி என்பதனால் சேசிங் தான் சரியான தேர்வாக இருக்கும் என கொல்கத்தா அணி முடிவு செய்தது. மேலும் சென்னையுடன் நடந்த முந்தைய போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்திருந்த நிலையில் தோல்வியைச் சந்தித்தாலும் கொல்கத்தா இம்முடிவுக்கு வந்திருக்கக்கூடும்.
கொல்கத்தா அணியில் பெர்க்குசன், சுநில் நரேன், வருண் சக்கரவர்த்தி போன்ற சிறந்த பவுலர்கள் இடம்பெற்றுள்ளதால் டெல்லிக்கு இது சவாலான போட்டியாகவே இருக்கும் என கருதப்பட்ட நிலையில்ல் முக்கிய பேட்ஸ்மேன்களான ஷிகர் தவான் மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் விக்கெட்டுகள் தொடக்க ஓவர்களிலேயே வீழ்த்தப்பட்டதும் கொல்கத்தா அணிக்கு பெரும் நம்பிக்கை உதயமானது. ஸ்டீவ் ஸ்மித் மற்றும் ரிஷப் பண்ட் மட்டுமே நின்று விளையாடிய நிலையில் அவர்களது விக்கெட்டையும் வீழ்த்திய பிறகு சரசரவென்று விக்கெட்டுகள் சரியத்தொடங்கின. ரபாடா, லலித் யாதவ், அக்சர் படேல் ஆகியோர் ஒரு ரன் கூட எடுக்காமல் அவுட் ஆகினர். ஷிகர் தவான், ஸ்மித், பண்ட் ஆகியோரைத் தவிர மீதமுள்ளவர்கள் ஒற்றை இலக்க ரன்களிலேயே ஆட்டமிழந்தனர்.
128 ரன்கள் எடுத்தால் வெற்றி என்கிற நிலையில் கொல்கத்தா களமிறங்கியுள்ளது. சுக்மன் கில், வெங்கடேஷ் ஐயர், ராகுல் திரிபாதி போன்ற மகத்தான வீரர்கள் உள்ள கொல்கத்தா அணி இந்த இலக்கை எளிதில் எட்டி விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
























