இயக்குநரும் நடிகருமான எம்.சசிக்குமாரின் பிறந்த நாள் இன்று. தற்போது நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் சசிக்குமாரும் அவரது படக்குழுக்களும் தமிழ் திரையுலகும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டிருக்கிறது.
சசிக்குமார் நடிப்பில் ராஜவம்சம் திரைப்படம் விரைவில் வெளியாகவிருக்கிறது. பொன்ராம் இயக்கத்தில் எம்.ஜி.ஆர் மகன், கொம்பு வெச்ச சிங்கம்டா உள்ளிட்ட திரைப்படங்களில் அவர் நடித்து வருகிறார். மேலும் சில படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார். இயக்குநர் என்பதை விட நடிகர் என்கிற அடையாளத்தையே அவர் இன்று தாங்கியிருந்தாலும் அவரது முதல் படம் தமிழ் சினிமாவின் மிக முக்கியப் படங்களில் வைக்கத்தக்க ஓர் படம். 2008ம் ஆண்டு வெளியான சுப்ரமணியபுரம் படம்தான் அது.
அத்திரைப்படத்தில் ஜெய்யுடன் இணைந்து சசிக்குமாரும் நடித்திருப்பார். 80களின் காலகட்டத்தை கதைக்களமாக அத்திரைப்படத்தில் அப்போதைய மதுரை வாழ்வு உயிரோட்டமாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கும். வேலைவெட்டி இல்லாமல் சுற்றித் திரியும் இளைஞர்கள் எப்படி அரசியல் சுயலாபத்துக்காகப் பயன்படுத்தப்படுகிறார்கள் என்பதையும் அதற்கான எதிர்வினைகள் எவ்விதம் வெடிக்கின்றன என்பதையும் கூர்மையான திரைக்கதையின் மூலம் சொன்ன விதத்தில் அத்திரைப்படம் பெரிய வெற்றி பெற்றது. பெரும்பாலும் காதல், சினிமாத்தனமான சண்டைப்படங்கள் என வெளிவந்து கொண்டிருந்த தமிழ்த் திரையுலகில் அமீர் இயக்கிய பருத்தி வீரன் மற்றும் சசிக்குமாரின் சுப்ரமணியபுரம் இவ்விரு படங்களும் புதிய அலையாக கருதப்பட்டன. வணிக ரீதியாக வெற்றி பெற்றதோடு விமர்சகர்களாலும் கொண்டாடப்பட்டது. இந்தித் திரையுலகில் பெரிதும் கொண்டாடப்படும் இயக்குநரான அனுராக் காஷ்யப் பீஹார் மாநிலத்தில் உள்ள வாசிப்பூரில் நிகழ்ந்த குழு வன்முறையை அடிப்படையாக வைத்து கேங்க்ஸ் ஆஃப் வாசிப்பூர் என்கிற படத்தை இரண்டு பாகங்களாக இயக்கினார். அத்திரைப்படம் இந்தியில் பெரிய வெற்றி பெற்றதோடு தீவிரமான திரை விமர்சகர்களாலும் மெச்சப்பட்டது.
இத்திரைப்படம் குறித்து அனுராக் காஷ்யப் பேசுகையில் இத்திரைப்படத்தினை இயக்க பருத்தி வீரன், சுப்ரமணியபுரம் ஆகிய இரண்டு படங்கள் பெரிய இன்ஸ்பிரேஷனாக இருந்ததாகக் கூறியிருக்கிறார். இன்றைக்கு மலையாளத் திரைப்படங்கள் கலையம்சம் மிகுந்து வெளி வருகின்றன. மலையாளத் திரையுலகம் புத்துயிர் பெற்றது 2010ம் ஆண்டுக்குப் பிறகுதான். இது குறித்து நேரம், பிரேமம் படங்களின் இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் ஒரு பேட்டியில் ‘மலையாள சினிமா புதிய போக்கை நோக்கிச் செல்ல வேண்டும் என்கிற விவாதத்தில் தமிழ் சினிமாவில் பருத்தி வீரன், சுப்ரமணியபுரம் போன்ற படங்களெல்லாம் வந்திருக்கிறது என்பது குறிப்பிடப்பட்டது’ என்று கூறியிருக்கிறார். 2000க்குப் பிறகான தமிழ்த் திரைப்பட சூழலில் ஒரே படம் மூலம் தனது முக்கியமான பங்களிப்பை வழங்கிய சசிக்குமாருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.
























