’ஒவ்வொரு குழந்தையும் ஒரு விஞ்ஞானி’ திட்ட தொடக்க நிகழ்ச்சி சென்னை தரமணியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் உலக சுகாதார நிறுவன தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன், பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டார்கள்.
நிகழ்ச்சி முடிந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், ”நடப்பாண்டில் சென்னை மாநகராட்சி பள்ளிகளில் இருந்து மாணவர்களை தேர்வு செய்து அவர்களுக்கு அறிவியல் பயிற்சி வழங்க உள்ளதாக கூறினார். ”கொரோனா தொற்றை காட்டிலும் கற்றல் குறைபாடே மிகப்பெரிய தொற்றாக இருக்கும் என்பது விஞ்ஞானிகளின் கருத்தாக உள்ளது” எனவும் குறிப்பிட்டார்.
”எல்லாவற்றையும் விட மாணவர்களின் பாதுகாப்பும், உடல்நிலையும் மிகவும் முக்கியம். அதைக் கருத்திற்கொண்டே அரசு முடிவு எடுத்து வருவதாக” கூறிய அவர், ”ஊரடங்கு நீட்டிப்பு தொடர்பான அறிவிப்பு வெளியாகும்போது, பள்ளிகள் திறப்பு குறித்து தெரிவிக்கப்படும்” என்றார். மேலும், ”மாணவர்கள் பள்ளிக்குக் கட்டாயம் வர வேண்டியது அவசியமில்லை, அரசு பள்ளிகள் திறந்திருக்கும், விருப்பமுள்ள மாணவர்கள் வரலாம்” எனவும் கூறியுள்ளார்.
























