நேற்று முன்தினம் வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை, நேற்று தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று புயல் சின்னமாக மாறியுள்ளது. ’குலாப்’ என இந்தப் புயலுக்கு பெயர் சூட்டப்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக்கடலில் உருவாகி உள்ள குலாப் புயல், ஒடிசா மாநிலம் கோபால்பூர் மற்றும் ஆந்திராவின் கலிங்கப்பட்டினம் இடையே இன்று கரையை கடக்கிறது. ஒடிசா சிறப்பு நிவாரண ஆணையாளர் பி.கே. ஜெனா, ”குலாப் புயலின் பாதை மற்றும் எந்த நேரத்தில் சரியாக கரையை கடக்கும் என்பது பற்றிய தெளிவான விவரங்கள் அடுத்த 2 முதல் 3 மணிநேரத்தில் தெரிய வரும்.
புயலானது நள்ளிரவில் கரையை கடக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், மணிக்கு 70 முதல் 80 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீச கூடும். கனமழை முதல் மிக கனமழை பெய்யும். சில இடங்களில் அதிகளவில் கனமழை பெய்யும்” என கூறியுள்ளார்.
”ஒடிசாவில் 42 பேரிடர் அதிரடி விரைவு படை குழுக்கள், 24 தேசிய பேரிடர் மீட்பு படை குழுக்கள் மற்றும் 103 மாநில தீயணைப்பு துறை படையினர் ஆகியோர் ‘குலாப்’ புயலை எதிர்கொள்ள குவிக்கப்பட்டு உள்ளனர். மக்களை வெளியேற்றும் பணிகளும் நடந்து வருகின்றன” எனவும் அவர் கூறியுள்ளார்.
’குலாப்’ புயல் எதிரொலியாக ஆந்திர பிரதேசத்தின் ஸ்ரீகாகுளம் நகரில் பலத்த காற்றுடன் கனமழையும் பெய்து வருகிறது. முன்னெச்சரிக்கையாக நகரின் பல பகுதிகளில் மக்கள் பாதுகாப்பு நிறைந்த பகுதிகளுக்கு சென்றுள்ளனர்.
























