கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் கழிப்பறை வசதி இல்லை என்கிற காரணத்துக்காக இளம்பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியிருக்கிறது.
சிதம்பரம் நகராட்சிக்குட்பட்ட குளக்கரையைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ். கூலி வேலை செய்து வரும் இவரது மகள் அனுசுயா சிதம்பரம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வருகிறார். இவர்களது வீட்டில் கழிவறை வசதி இல்லாததால் திறந்தவெளியில் இயற்கை உபாதை கழிக்கும் சூழல்தன் நிலவியுள்ளது. இதனால் மிகவும் தயக்கத்துக்குள்ளான அனுசுயா கழிவறை ஏற்படுத்தித் தருமாறு பெற்றோரிடம் கூறி வந்துள்ளார்.
கூலி வேலை செய்து வரும் அனுசுயாவின் பெற்றோரால் போதிய வருமான இல்லாததால் கழிவறை வசதி செய்துகொடுக்க முடியவில்லை. இதனால் மனமுடைந்த அனுசுயா, கடந்த 19ஆம் தேதி மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்தார். வலி தாங்க முடியாது அவர் அலறியதும் அச்சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து தீயை அணைத்தனர். இருப்பினும் அனுசுயாவின் உடல் முழுவதும் தீக்காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் சிகிச்சைக்காக சிதம்பரம் ராஜாமுத்தையா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கிருந்து அவர் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று அவர் உயிரிழந்துள்ளார். ஒவ்வொருவருக்கும் அத்தியாவசிய தேவைகளில் ஒன்று கழிவறை. சுகாதாரமான நாட்டை உருவாக்க வீடுகள் தோறும் கழிப்பறை அமைக்கப்பட வேண்டும் என்கிற பிரச்சாரம் நீண்ட காலமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கழிவறை அமைக்க மத்திய மாநில அரசுகள் சார்பில் மானியங்கள் வழங்கப்பட்டு வரும் நிலையில் கழிவறை வசதி இல்லை என்பதற்காக ஒரு பெண் தற்கொலை செய்து கொண்டது மிகவும் வேதனைக்குரிய ஒன்று.
























