உலக புகழ்பெற்ற சர்வதேச சுற்றுலா தலமான மாமல்லபுரம் நகரில் 7-ம் நூற்றாண்டில் பல்லவ மன்னர்களால் கருங்கல்லில் வடிவமைக்கப்பட்டது மாமல்லபுரம் கடற்கரை கோவில். இந்த கோவில், யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்டு உலக பாரம்பரிய நினைவு சின்னமாக திகழ்கிறது. இந்திய அளவில் தாஜ்மகாலுக்கு அடுத்தபடியாக சுற்றுலா பயணிகள் அதிகம் ரசிக்கும் கலை சின்னமாக இந்த கடற்கரை கோவில் விளங்குகிறது.
மாமல்லபுரம் நகரின் அடையாள சின்னமான கடற்கரை கோவிலின் மாதிரி சிற்பம் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் சார்பில் மாமல்லபுரம் அரசு சுற்றுலா விடுதி பின்புறம் உள்ள கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ளது.
உண்மையான கடற்கரை கோவில் நினைவு சின்னம் மீது ஏறி புகைப்படம் எடுக்க முடியாது. புகைப்படம் எடுக்கத் தொல்லியல் துறை கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. தற்போது மாமல்லபுரம் வரும் சுற்றுலா பயணிகள் கடற்கரையில் உள்ள கடற்கரை கோவிலின் மாதிரி சிற்பம் முன்பு செல்பி எடுக்க அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
























