குஜராத் மாநிலம், அகமதாபாத், காந்திநகரைச் சர்ந்தவர் ஃபுளோரா அசோடியா என்ற 11 வயது சிறுமி. அந்தச் சிறுமிக்கு மாவட்ட ஆட்சியராக வேண்டும் என்ற கனவு இருந்து வந்திருக்கிறது. இந்நிலையில் அச்சிறுமி மூளையில் கட்டி இருப்பது கண்டறியப்பட்டது.
மூளைப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஃபுளோராவிற்கு கடந்த ஆகஸ்ட் மாதம் தான் அறுவைசிகிச்சை நடைபெற்றது. சிறுமியின் ’ஆட்சியர்’ கனவு ‘மேக் எ விஷ்’ [Make a Wish] என்ற அறக்கட்டளை மூலம், மாவட்ட கலெக்டர் சந்தீப் சாகலே-விற்கு தெரிவிக்கப்பட்டது.
சிறுமி ஃபுளோராவின் கனவை நனவாக்கும் பொருட்டு, மாவட்ட ஆட்சியர் சந்தீப் சாகலே ஒரு நெகிழ்ச்சியான செயலைச் செய்திருக்கிறார். கடந்த வாரம் சனிக்கிழமையன்று அலுவலக வாகனத்தை ஃபுளோராவின் வீட்டுக்கு அனுப்பி, சிறுமியையும், அவரது உறவினர்களையும் அழைத்து வர ஏற்பாடு செய்து, பிறகு ஃபுளோராவை ஒரு நாளைக்கு மாவட்ட ஆட்சியர் பொறுப்பில் அமர வைத்திருக்கிறார். ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மற்ற அதிகாரிகளும் ஃபுளோரா விரைவில் குணமாக பரிசுகள் வழங்கி, வாழ்த்துகளும் தெரிவித்தார்கள். மனதைக் கரைய வைக்கும் ஆட்சியரின் இந்த செயல் பலரது பாராட்டுக்களையும் பெற்றிருக்கிறது.
























