ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் தமிழக அரசு சார்பில் யாரும் கலந்து கொள்ளாததையொட்டி பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வைத்த குற்றச்சாட்டும் அதற்கு தமிழக நிதியமைச்சர் அளித்த பதிலையும் அடிப்படையாக வைத்து இரு தரப்பினரும் சமூக வலைதளங்களில் மோதிக்கொண்டுள்ளனர்.
ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் கடந்த வாரம் உத்திரப்பிரதேச மாநிலம் லக்னோவில் நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு தமிழக அரசு சார்பில் செல்ல வேண்டிய நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் செல்லவில்லை. இதனைத் தொடர்ந்து பாஜகவின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் அண்ணாமலை நிதி அமைச்சர் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்துக்குப் போகாமல் அவர் கொழுந்தியா வீட்டு வளைகாப்புக்குச் சென்று விட்டார் என்று பேசினார்.

இதற்கு எதிர்வினையாற்றிய நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்துக்கான அழைப்பு தாமதமாகவே தனக்கு வந்ததாகவும் அத்தேதியில் வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள ஒப்புக்கொண்டிருந்ததாலும் போக முடியவில்லை என்று கூறினார். போக கொழுந்தியாவே இல்லாத நான் எந்த கொழுந்தியா வளைகாப்புக்கு செல்லப்போகிறேன். பொய் சொல்வதற்கும் ஓர் அறிவு வேண்டும் என்றும் அண்ணாமலையைச் சாடியிருந்தார்.
நிதியமைச்சர் கலந்து கொண்டது சமூக வளைகாப்பு நிகழ்ச்சி. அதனை கொழுந்தியா வளைகாப்பு என்று சொன்னதற்காக ‘மன்னிப்புகேள் அண்ணாமலை’ என்கிற ஹேஷ்டேக்கில் ட்விட்டரில் பதிவுகள் இடப்பட்டன. அது இந்திய அளவில் ட்ரெண்டான நிலையில், பாஜகவினரும் தங்கள் பங்குக்கு ‘பதில்சொல்திமுக’ என்கிற ஹாஷ்டேக்கை தொடங்கி அதனையும் இந்திய அளவில் ட்ரெண்டாக்கியுள்ளனர்.
























