சென்னை சுற்றுவட்டார பகுதிகளில் பெரும்பாலான இடங்களில், நள்ளிரவில் கடும் குளிர்காற்றுடன் கனமழை பெய்தது.
தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசலனம் காரணமாக ஆங்காங்கே மழை பெய்து வரும் நிலையில், 7 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், இன்று முதல் 4 நாட்களுக்கு ஆங்காங்கே மழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி, இன்று திருவள்ளூர், வேலூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, விழுப்புரம் மற்றும் கடலூர் ஆகிய 7 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் சில இடங்களில் மிதமான மழையும், உள் மாவட்டங்களில் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
நாளை (செப்டம்பர் 23) டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய கடலோர மாவட்டங்கள், புதுச்சேரியில் சில இடங்களில் இடி-மின்னலுடன் கூடிய மிதமான மழையும், ஏனைய மாவட்டங்களில் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்ய வாய்ப்பு இருக்கிறது.
நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) கடலூர், விழுப்புரம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், கடலோர மாவட்டங்கள், புதுச்சேரியில் அனேக இடங்களில் மிதமான மழையும், மற்ற மாவட்டங்களில் அனேக இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும். 25ஆம் தேதியும் (சனிக்கிழமை) சில இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
























