கோடம்பாக்கத்தில் இளையராஜாவின் புதிய ஸ்டுடியோவுக்கு கமல்ஹாசன் சென்று இளையராஜாவை சந்தித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ப்ரசாத் ஸ்டுடியோவில் தனது ரெக்கார்டிங் ஸ்டுடியோவை வைத்திருந்த இளையராஜா சில பிரச்னைகள் காரணமாக அங்கிருந்து வெளியேறி கோடம்பாக்கத்தில் புதிய ஸ்டுடியோவை அமைத்து இசையமைப்பு வேளைகளில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில் இளையராஜாவின் புதிய ஸ்டுடியோவுக்கு ரஜினி, விஜய் சேதுபதி, வெற்றிமாறன் உள்ளிட்டோர் நேரில் சென்று பார்வையிட்டு இளையராஜாவைச் சந்தித்து பேசிவிட்டு வந்தனர். அவ்வரிசையில் இன்று நடிகர் கமல்ஹாசன் இளையராஜா ஸ்டுடியோவுக்குச் சென்று பூங்கொத்து கொடுத்து சந்தித்தார். அந்த புகைப்படங்கள் வெளியானதுமே சமூக வலைதளங்களில் அதிவேகமாகப் பரவ ஆரம்பித்தன. தமிழ் சினிமாவின் இருபெரும் ஆளுமைகள் சந்தித்துக் கொண்ட தருணமாக அது இருந்ததே இவ்வளவு நெகிழ்வோடு அனைவரும் அப்புகைப்படங்களைப் பகிரக் காரணமாக இருக்கிறது.
























