நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் இன்று 45-வது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டம் முடிந்த பின்னர் நிர்மலா சீதாராமன் பேட்டியளித்தார். அப்போது ‘‘பெட்ரோல், டீசல் விலை ஜி.எஸ்.டி. வரம்பிற்குள் கொண்டு வரப்படாது. ஜி.எஸ்.டி-க்குள் கொண்டு வருவதற்கான நேரம் இதுவல்ல என்று உயர்நீதிமன்றம் தெரிவிக்க இருக்கிறோம். ஜி.எஸ்.டி.-க்குள் கொண்டு வருவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. கூட்டத்தில் கலந்து கொண்ட அனைத்து உறுப்பினர்கள் ஜி.எஸ்.டி. வரம்பிற்குள் கொண்டு வரக்கூடாது என கருத்து தெரிவித்தனர்’’ என்றார்.
முன்னதாக பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி., வரம்பிற்குள் கொண்டு வருவது குறித்து கவுன்சில் பரிசீலிக்க வேண்டும் என, கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை ஏற்று கவுன்சில் கூட்டத்தில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. பல்வேறு மாநிலங்கள் இதை ஏற்க மறுத்ததை அடுத்து, கூட்டத்தில் இந்த தீர்மானம் நிராகரிக்கப்பட்டது. தற்பொழுது இது குறித்து கேரள உயர் நீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்படும்.
எவை எவைக்கு விலக்கு?
- உயிர் காக்கும் மருந்துகளான ‘ஸால்க்ஜெல்ஸ்மா’ மற்றும் ‘வில்டெப்சோ’ ஆகிய மருந்துகள் 16 கோடி ரூபாய் விலை உடையது. இந்த மருந்துகளுக்கு ஜி.எஸ்.டி.,யில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
- ‘மஸ்குலர் அட்ரோபி’ எனப்படும் தசைநார் சிதைவு நோய்க்கு பயன்படுத்தப்படும் மருந்தை தனிப்பட்ட உபயோகத்திற்காக இறக்குமதி செய்கையில் வரி விலக்கு அளிக்கப்படும்.
- கொரோனா சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் ‘ஆம்போடெரிசின் – பி, டாசிலிசுமாப், ரெம்டெசிவிர், ஹெபாரின் உள்ளிட்ட மருந்துகளுக்கான வரி விலக்கு டிச., 31 வரை தொடரும். அதன் பின்னர் கொரோனா சிகிச்சைக்கான மருத்துவ உபகரணங்களுக்கு வழங்கப்பட்ட வரி விலக்கு தொடராது.
- புற்றுநோய் சிகிச்சை மருந்தான ‘கீட்ருடா’ உள்ளிட்ட மருந்துகளுக்கான ஜி.எஸ்.டி., வரியில் தளர்வு அளிக்கப்படுகிறது.
- குத்தகைக்கு இறக்குமதி செய்யப்படும் விமானங்களுக்கான ஐ.ஜி.எஸ்.டி.,யில் விலக்கு அளிக்கப்படுகிறது. விமான நிலைய குத்தகைக்காக இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு இரட்டை வரி விதிப்பில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.
- டீசலுடன் கலக்க பயன்படும் பயோ டீசலுக்கான வரி 5 சதவீதமாக குறைக்கப்படுகிறது. ரயில்வே உதிரி பாகங்களுக்கான வரி, 12 சதவீதத்தில் இருந்து, 18 சதவீதமாக உயர்த்தப்படுகிறது.
- மத்திய, மாநில அரசுகள் நடத்தும் திறன் மேம்பாட்டு திட்டங்களுக்கு வரி விலக்கு அளிக்கப்படுகிறது. பயிற்சி வகுப்புகளுக்கான செலவில் 75 சதவீதத்திற்கு மேல் அரசு ஏற்கும்பட்சத்தில், அந்த பயிற்சிகளுக்கு வரி விலக்கு அளிக்கப்படுகிறது.
- காலணி மற்றும் ஜவுளித்துறைக்கான வரி விதிப்பில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் அடுத்த ஆண்டு ஜனவரி முதல் அமலுக்கு வருகிறது.
- எழுது பொருள் மற்றும் அதன் உதிரி பாகங்களுக்கு 18 சதவீத வரி விதிக்கப்படுகிறது.
- சரக்கு வாகனங்களை இயக்க மாநிலங்கள் வசூலிக்கும் தேசிய அனுமதி கட்டணத்தில் விலக்கு.
























